பட்ஜெட் எப்படியிருக்கும்? - ரவிக்குமார்

Views : 1097

பதிவு செய்த நாள் 01-Feb-2020

நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றன என்று நாடே தவிப்போடு காத்திருக்கிறது. இன்று குடியரசு தலைவர் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கும்போது நாளைய பட்ஜெட்டில் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.


கடந்த பட்ஜெட்டில் ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட எந்த ஒரு இலக்கும் எட்டப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில்

20 % ஐக் கூட அரசால் எட்ட முடியவில்லை.


விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திட்டமொன்று அறிவிக்கப்பட்டு அதற்காக 75 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. மீதத் தொகை முழுவதும் வேறு செலவினங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்விக்கு ஒதுக்கிய நிதியில் கூட 3,000 கோடி ரூபாயை திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.


FRBM சட்டத்தின்படி 3% க்குள் இருக்கவேண்டிய 

நிதிப் பற்றாக்குறை ஏற்கனவே 3.8% ஐத் தாண்டிவிட்டது. அது மேலும் அதிகரிக்கக்கூடும். அதை 3% க்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்ற இலக்கை மறந்துவிடவேண்டியதுதான். ஜி எஸ் டி வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட 6.6 லட்சம் கோடி ரூபாயில் கடந்த நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் 4 லட்சம் கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ஆகாததால் மாநில அரசுகளுக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி லட்சக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. 


விவசாயத் துறையின் வளர்ச்சி 2016-17 இல் 7.9% ஆக இருந்தது.அது 2018-19 இல் 2.1 % ஆக வீழ்ந்துவிட்டது. அதை இந்த ஆண்டும் மீட்க முடியவில்லை. பணவீக்கத்தை 4% க்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்தார்கள். கடந்த டிசம்பரில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 10.7% ஐத் தொட்டுவிட்டது. 


இந்நிலையில் டெல்லி , பீகார் தேர்தல்களை மனதில் வைத்து ‘பாப்புலிச' அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்ற விரும்பினாலும் முடியாத இக்கட்டான சூழலில் அது சிக்கியுள்ளது. 


இன்றைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். கிராமப்புற மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நூறுநாள் வேலைத்திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி 

உள்ளிட்ட திட்டங்களுக்கு பெருமளவிலான நிதியை அரசு செலவு செய்ய வேண்டும். அது இப்போது உள்ள நிலையில் சாத்தியமில்லை. உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றால் பெருமளவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதற்கு நாட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். அதையும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற அடாவடி களின் மூலமாக இந்த அரசு சீரழித்து வைத்துள்ளது. 


சுருக்கமாகச் சொன்னால் இன்றைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் அரசாங்கத்திடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெரிகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மக்களைப் பிளவுபடுத்தி அடக்குமுறை மூலம் அச்சுறுத்தி வைப்பதுதான்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை தயக்கமின்றி ஆதரிக்குமாறு இன்று பிரதமர் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் அழைப்பு கொடுங்கோன்மை மூலம் மக்களின் குரலை நெரித்துவிடலாம் என அவர் நம்புவதையே 

காட்டுகிறது. 


இனி, இந்த நாட்டைக் காப்பாற்ற ஆட்சியாளர்களால் முடியாது என்பது அம்பலமாகிவிட்டது, மக்கள்தான் இந்த நாட்டைக்காப்பாற்ற வேண்டும்.