பாறையாய் இறுகும் மணல் -ரவிக்குமார்

Views : 953

பதிவு செய்த நாள் 18-Feb-2020

தண்ணீரின் ஞாபகங்களை

மீன்கொத்திகளிடம் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில்

நீ வந்தாய்

மணலின் மறதி குறித்து ஆராய்வதாய் சொல்லிக்கொண்டாய்

தாகம் என்றது மரம்

விக்கலில் திணறிக்கொண்டிருந்தது வயல்

புழுக்கம் தாளாமல் பெருமூச்செறிந்தது குளம்

முன்பொரு காலத்தில்

நதி இருந்தது என்றது மீன்கொத்தி

நீராடிக் களித்தபொழுதுகளை நினைவுகூர முடியாமல்

தடுமாறியது மணல்

ஆம்பல் அலர்ந்திருந்த காலத்தை எண்ணி

அழுதோம்

கழுகாக மாறுகிறது மீன்கொத்தி

பாறையாய் இறுகுகிறது மணல்