”அவநம்பிக்கை கொள்ளுங்கள் ” - ரவிக்குமார்

Views : 1318

பதிவு செய்த நாள் 08-Nov-2022


தர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வரங்கை ஏற்பாடு செய்த உங்களை நான் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகத்தில் இப்படி மாணவர்கள் விவாதிப்பது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொருபுறம் இது என்னை அச்சமடையவைக்கிறது. ஒரு வன்முறை சம்பவம் எப்படி கருத்தரங்கப் பொருளாக மாறுகிறது என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். எல்லாம் அமைப்பின் பகுதிகளாக மாற்றப்படுகின்றனவா என்று எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். விபத்து என்பது எப்படி போக்குவரத்தின் அங்கமாக மாறிவிட்டதோ அப்படி எதிர்ப்பும் இப்போது அமைப்பின் அங்கமாக மாறுகிறதோ என கவலைகொள்கிறேன். 

1980 களில் உங்களைப்போல நானும் மாணவனாக இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான் இதே தர்மபுரி பகுதியில் நக்ஸலைட்டுகள் போலீஸாரால் வேட்டையாடப்பட்டார்கள். அப்போது அதைப்பற்றி கருத்தரங்கு நடத்தலாமென எங்களுக்குத் தோன்றவில்லை. நாமும் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும், வன்முறையை எதிர்க்கவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் இன்று இங்கே இருக்கும் மாணவர்கள் வன்முறையை ஒரு ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

ஈழத்துக் கவிஞர் விலவரத்தினம் என்னிடம் தனது அனுபவம் ஒன்றைச் சொன்னார். ஒரு இரவு தனது வீட்டில் குடும்பத்தோடு படுத்திருக்கிறார். திடீரென அவரது மனைவி ‘ ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நாம் இங்கே இருக்கவேண்டாம்’ எனச் சொல்லி எல்லோரையும் வெளியில் அழைத்து வருகிறார். அன்றிரவு உறவினர் வீட்டில் படுத்திருக்கிறார்கள். நள்ளிரவு கடந்ததும் பெரியதொரு வெடி சப்தம். வெளியில் வரப் பயந்து வீட்டிலேயே இருக்கிறார்கள். விடிந்தபின் பார்த்தால் சிங்கள விமானப் படையின் குண்டு வீச்ச்சில் வில்வரத்தினத்தின் வீடு தரைமட்டமாகிக் கிடக்கிறது. வீடு இருந்த இடத்தில் நின்று அழுது அரற்றுகிறார்கள். அவர் தனது சட்டைப் பையைத் துழாவுகிறார். வீட்டின் சாவி கையில் அகப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார். அவரது மகன் சொல்கிறான்’ வீடே போய்விட்டது. எதற்கு இந்த சாவி? அதையும் வீசி எறியுங்கள்’ . வில்வரத்தினம் தன் மகனிடம் சொல்கிறார்’ இல்லையப்பா, நமக்கு ஒரு வீடு இருந்தது என்பதற்கு இந்த சாவிதான் சாட்சி. இதை வீசி எறியக்கூடாது’. தமிழ்நாட்டில் அப்படி நூற்றுக்கணக்கான சாவிகள் தலித் மக்களிடம் இருக்கின்றன. நாளை நீங்களெல்லாம் கள ஆய்வுக்காக தர்மபுரி போக இருப்பதாக அறிந்தேன். அங்கே அதுபோன்ற சாவிகள் இருநூறுக்கும் அதிகமாக இருக்கின்றன. அங்கிருக்கும் அந்த மக்களிடம் அந்த சாவிகளை வாங்கிப் பாருங்கள். அந்த சாவிகளைக்கொண்டு சாதியவாதிகளின் அடைத்துக்கிடக்கும் மனங்களைத் திறக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.

தர்மபுரிக்குச் செல்லும்போது அங்கே எரிந்து கிடக்கும் வீடுகளில் என்னென்ன பொருட்கள் சேதமடைந்தன என்று கணக்கெடுக்காதீர்கள். அது வருவாய்த் துறையினரின் வேலை. எரிக்கப்பட்ட வீட்டின் முன்னால் ஐந்து நிமிடம் நில்லுங்கள், அந்த இழப்பை உணர்ந்துபாருங்கள். ஒரு மனிதரின் இழப்பில் மிகவும் துயரம் தருவது அம்மாவின் மரணம். கண்ணெதிரில் அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதுபோல துயரமானது வெறெதுவும் இருக்கமுடியாது. நீங்களெல்லாம் வயதில் இளையவர்கள், அந்தத் துயரம் உங்களில் பலருக்குத் தெரியாது. அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. ஒரு வீடு எரிக்கப்படும்போது ஆடைகள் எரிந்துபோகின்றன, உடைமைகள் எரிந்து போகின்றன, கல்விச் சான்றிதழ்கள் எரிந்துபோகின்றன, பணம், நகைகள் சாம்பலாகின்றன. அவற்றையெல்லாம் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு வீட்டோடு சேர்ந்து எரிந்து போகும் நினைவுகளை எப்படி திரும்பப் பெறுவது? ஒரு வீட்டோடு வைத்து எரிக்கப்படும் கனவுகளை எப்படித் திரும்பப் பெறுவது? அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. அந்தத் துயரத்தை நீங்கள் உணரமுடியுமா என நாளைக்கு நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

தர்மபுரியில் அதே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு 'தர்மபுரி எதிரொலிகள் ' என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்பு, பாலன் சிலை திறப்பில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தோழர்களை, அவர்கள் இசைத்த புரட்சிப் பாடல்களை எண்ணிப் பார்க்கிறேன். திரும்பிய திசையெல்லாம் செங்கொடிகள் அசைந்த ஊர்கள். இப்போது அதே கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்த நெருப்பு செங்கொடிகளை விடவும் சிவப்பாக மேலெழுந்து அசைகிறது. இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கிறது? அவர்களது போராட்ட வடிவங்களும் அமைப்பின் அங்கங்களாக மாறிவிடும்போது அவர்கள் தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டு அழிவதுதவிர வேறென்ன வழி இருக்கிறது?

நேற்று நான் ஒரு டிவி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்டேன். இப்போது திரைப்படங்களைப் போலவே ’டாக் ஷோ’க்களும் கவனம் பெற்று வருகின்றன. அவற்றை எப்படி ’ஸ்பைஸியாக’ அமைப்பது என்ற வித்தை நமது ஊடகத் துறையினருக்கு அத்துப்படியாகிவிட்டது. இப்படியான ‘டாக் ஷோக்கள்’ அதில் கலந்துகொள்பவர்களின் சாமர்த்தியத்தைக் காட்டிக்கொள்ளும் வார்த்தை யுத்தங்களாக மாறிவிடும்போது அவற்றால் என்ன பயன் ? இதோ இங்கே நான் உங்கள் முன்னால் பேசுவதும்கூட ஒரு ‘பெர்ஃபார்மன்ஸாக’ மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கே வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு என்ன பயன் ?

நான் இப்படிப் பேசும்போது ‘இதென்ன இவனொரு ‘சினிக்காக’ இருக்கிறான்’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆமாம். அது உண்மைதான், உங்களையும் இதேபோல அவநம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சூழலின்மீது அருவருப்பு கொள்ளுங்கள், உங்கள் வகுப்பறையின், பல்கலைக்கழகத்தின் அதிகாரத்துவ செயல்பாடுகளை எண்ணி அருவருப்படையுங்கள் . அத்தகைய அருவருப்பு உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் மனிதர்களாகத் தொடங்கிவிட்டீர்கள் என அர்த்தம். உங்கள் சூழலில் ஒன்றிப்போகாமல் அதை மாற்ற முற்படுகிறீர்கள் என அர்த்தம். அத்தகைய மனிதர்களாக உங்களை மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன், இப்போது விடை பெறுகிறேன்.


( 04.12.2012 செவ்வாய் அன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியதன் சுருக்கம் )