சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவது ஏன்? -ரவிக்குமார்

Views : 1177

பதிவு செய்த நாள் 06-Nov-2022


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றிருக்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களே! மாண்புமிகு சிறுபான்மையினர் நலன், மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களே! இந்தி விழாவில் பங்கேற்றுள்ள தாய்மார்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த விழா, தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படுகிற விழாக்களிலேயே தலைசிறந்த விழா என்று கூறலாம். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அந்த மனித வளத்தின் இன்றியமையாமையை நமக்கெல்லாம் உணர்த்தும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வளைகாப்பு நடத்த முடியாத ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு அரசாங்கமே அந்த விழாவை நடத்துகிறது என்று இதைக் கருதிவிடக்கூடாது. இது சடங்குக்காக நடத்தப்படுகிற ஒரு விழா அல்ல. கருவுற்ற தாய்மார்களின் ஆரோக்கியம் கருதி அதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதற்காக நடத்தப்படுகிற விழா

நமது தாய்மார்கள் பொதுவாக தியாகம் உள்ளம் படைத்தவர்கள். தன்னுடைய தாய் எப்படி தன்னுடைய தனிப்பட்ட நலன்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு அல்லது ஒதுக்கி வைத்து விட்டு தன்னை வளர்த்து ஆளாக்கினார் என்பது ஒவ்வொருவருக்கும் நினைவில் இருக்கும். அதை யாரும் மறக்க முடியாது. தன்னுடைய அம்மா பட்ட கஷ்டங்களை, தன்னை வளர்ப்பதற்கு பட்ட பாடுகளை எவரும் மறக்க முடியாது. அப்படி அம்மாவின் தியாகத்தை, அவருடைய கஷ்டங்களை விதந்து பேசுகிற அதே நேரத்தில் அதனால் அம்மாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் கொள்ள நாம் மறந்து விடுகிறோம்.

ஒரு தாய் பட்டினி கிடந்து தனது பிள்ளையை வளர்க்கும் போது அவருடைய உடல் நலம் மட்டுமல்ல அந்த குடும்பத்தின் நலனும் பாதிக்கப்படுகிறது. நமது பெண்கள் சத்தான உணவுகளை சமைத்தால் அதை தான் சாப்பிடாமல் அவற்றைத் தனது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ கொடுப்பார்கள். அப்படி அவர்கள் செய்வதால் பாதிக்கப்படுவது அவரது ஆரோக்கியம் மட்டுமல்ல அந்த குடும்பமும்தான். ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருப்பவர் அம்மாதான். அவர் உடல் நலம் குன்றி நொடித்துப்போனால் அந்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, நமது தாய்மார்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான தாய்மார்களை, ஆரோக்கியமான குழந்தைகளைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம் தான் மனித வளத்தில் தலைசிறந்த சமூகமாகத் திகழ முடியும். இதை உணர்ந்துதான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்த வழிகாட்டி இருக்கிறார்

கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலத்திலே என்னென்ன சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் , கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் , குழந்தை பிறந்ததற்குப் பிறகும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் இங்கே நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக விளக்கிக் கண்காட்சியாக அமைத்திருக்கிறார்கள்.

இந்திய அளவில் எடுக்கப்பட்ட நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே விவரங்களைப் பார்த்தால் இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் போதுமான சத்து இல்லாத காரணத்தினால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தேசிய அளவைவிட தமிழ்நாட்டின் நிலை சற்றே பரவாயில்லை என்றாலும்கூட இங்கேயும் அத்தகைய சத்துக் குறைவான தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களின் நலன் கருதியே இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டமும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 100 சதவீத பிரசவங்களும் வீடுகளிலே நடைபெறவில்லை மருத்துவமனைகளில்தான் பாதுகாப்பான முறையிலே, சுகாதாரமான முறையிலே நடைபெறுகின்றன என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு செய்தியாகும். அதனால் மகப்பேறு என்பது ஆபத்து இல்லாத ஒன்றாக இப்போது ஆக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள் மீது மாண்புமிகு தமிழ் முதலமைச்சர் அவர்கள் காட்டும் அக்கறையை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கருவுற்ற தாய்மார்களாகிய உங்கள்மீது எந்த அளவுக்கு அக்கறையோடு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த அரசும் அக்கறையோடு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த விழா அமைந்துள்ளது. இந்த விழாவின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு சத்தான உணவை நீங்களெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று, இந்த நாடு வளம் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று உங்களையெல்லாம் வாழ்த்தி அமைகிறேன், நன்றி!

( விழுப்புரத்தில் 06.11.2022 அன்று நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் ஆற்றிய உரை )