ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் ஆலர்கோனின் ( Francisco X. Alarcón ) மூன்று கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

Views : 1925

பதிவு செய்த நாள் 21-Mar-2020

மார்ச் 21: உலகக் கவிதை நாள்


ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் ஆலர்கோனின் ( Francisco X. Alarcón ) மூன்று கவிதைகள்

தமிழில்: ரவிக்குமார் 


1. வேண்டுதல்


எனக்குக் கூட்டாளியாக ஒரு கடவுள்வேண்டும்

பழிக்கப்படும் வீடுகளில்

இரவுகளைக் கழித்து

சனிக்கிழமைகளில் 

தாமதமாய் விழித்தெழும் கடவுள்


வீதிகளில் விசிலடித்தபடி 

நடந்துசெல்லும் கடவுள்

காதலியின் அதரங்களின் முன்னால்

நடுங்கும் கடவுள்


தியேட்டர்களின் முன்னால் கியூவில் நிற்கிற

தேனீர்க் கடைகளில் 

டீ குடிக்கிற கடவுள்


காசநோய்ப் பிடித்து

ரத்தமாய்த் துப்புகிற

பஸ் டிக்கெட்டுக்கும் காசு இல்லாத

கடவுள்


ஆர்ப்பாட்டம் ஒன்றில்

போலீஸ்காரனின் தடியடியில்

மயங்கிவிழுகிற 

கடவுள்


சித்திரவதைக்குப் பயந்து

சிறுநீர் கழிக்கிற

கடவுள்


எலும்பின் கடைசிவரை 

காயம்பட்டு

வலிதாங்காமல் 

காற்றைக் கடிக்கிற

கடவுள்


வேலையில்லாத கடவுள்

வேலைநிறுத்தம் செய்கிற கடவுள்

பசித்த கடவுள்

தலைமறைவாக இருக்கும் கடவுள்

நாடுகடத்தப்பட்ட கடவுள்

கோபங்கொண்ட கடவுள்


சிறையில் வாடும் கடவுள்

மாற்றத்தை விரும்பும் கடவுள்


எனக்கு வேண்டும்

கடவுள்மாதிரியே இருக்கும்

ஒரு கடவுள் 


2. எல்லாவற்றையும் இழந்தவர்களுக்காக 


முழுமையான நம்பிக்கையோடு 

பாலைநிலங்கள் பலவற்றை

விரக்தியில் 

கடந்தவர்கள் 


எல்லா இடங்களிலும்

மூடுண்ட வெற்றுக் கைகளில்

துயரத்தைச்

சுமந்து அலைபவர்கள்   


‘ உனக்கென்று மதிப்பு இல்லை

உன் வீடு எங்கும் இல்லை

நீ வீண் ‘ 


எனக் கூவும்

ஆணிகளால் 

மண்வாரிகளால் ஆன 

கசக்கும் இரவைக் கண்டவர்கள்  


மலைகள் பேசும்

உமக்காக


மழை 

உமது எலும்புகளில்

தசையைச் சேர்க்கும்


பெரு நெருப்பாலான

சாம்பலிலிருந்து

மீண்டும் 

முளைத்தெழுங்கள்


சில காலத்துக்குமுன்

துவங்கியது

ஒரு கனவுத் தீவில் 


குடிமக்களை

அன்னியர்களாய்

ஆக்குவது


3. லாஸ் ஏஞ்சல்ஸ் வேண்டுதல்


பேருந்துகள்

வரவில்லை

ஏதோ பிரச்சனை


தெருக்கள்

தெருக்களாக இல்லை 


எத்தனை எளிது

கைகள் ஆயுதங்களாய் 

மாறுவது 


இரவை

தொந்தரவு செய்கின்றன 

வெடி சத்தம்

துப்பாக்கி சுடும் சத்தம்


எவ்வளவு ஓடுகிறோமோ

அவ்வளவு எரிகிறோம்


கடவுளே! எமக்கு வழிகாட்டு

வழிநடத்து 


பெட்ரோலுக்கு 

இடையே 

எம்மை

நடமாடும் தீக்குச்சிகளாய் 

ஆக்காமல்

விட்டுவிடு


ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் ஆலர்கோன் ( Francisco X. Alarcón ) (1954-2016) : ஸ்பானிஷ் மொழியில் எழுதிய மெக்ஸிக-அமெரிக்க கவிஞர்