ஊதுகுழலும் புத்தனும் - ரவிக்குமார்

Views : 1676

பதிவு செய்த நாள் 22-Mar-2020

ஊதுகுழலும் புத்தனும்

- ரவிக்குமார் 


ஊதுகுழலுக்கு 

மிகவும் வருத்தம்

புல்லாங்குழலைப் பாராட்டுவதுபோல்

தன்னை எவரும் போற்றுவதில்லையே  


இரண்டு குழல்களிலும் 

ஊதுகிறவர்கள் மனிதர்தாம்

அப்படியிருந்தும் 

ஏனிந்த பாகுபாடு?


புல்லாங்குழலைப் பார்த்திராதவர்களும்

என்னைத் தினமும் பாவிக்கிறார்கள்

அப்படியென்றால்

நான் தானே பிரபலம்?


அடுப்பு ஊத 

நான் 

இல்லாதுபோனால்

சோறு சமைக்க கறிகள் செய்ய

எப்படி இயலும்? 


அழகழகாக நகைகள் செய்யும்

ஆசாரிக்கும் நான்

அவசியமல்லவா? 


மனம் குமைந்து 

பெருமூச்செறிந்து 

புத்தனின் முன்னால் 

முறையிட்டு நின்றது  

ஊதுகுழல் 

 

மூடிய விழிகளைத் திறக்காமலேயே 

புத்தன் சொன்னான் :


“நிம்மதியைக் கொடுக்க 

புல்லாங்குழலுக்குத் தெரியும். 

நெருப்பை வளர்க்கத்தான் 

உன்னால் முடியும் “ 


(22.02.2020)


குறிப்பு : இது அரசியல் கவிதை அல்ல,