“ கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும்” - ரவிக்குமார்

Views : 1390

பதிவு செய்த நாள் 15-Nov-2022

தேசிய கூட்டுறவு வார விழாவில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவிருக்கின்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர்களே! அனைவருக்கும் வணக்கம்! 

சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவில் எப்படி தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறதோ அதுபோலவே கூட்டுறவுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுறவு இயக்கத்தை ஆரம்பித்து பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. 1904 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் என்ற ஊரில்தான் இந்தியாவிலேயே முதன் முதலாகக் கூட்டுறவுக் கடன் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கூட்டுறவுத் துறை என்பது மாநில அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரங்கள் அனைத்தையும் பறித்து எல்லாவற்றையும் மத்தியில் குவித்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் ஒன்றிய பாஜக அரசு கூட்டுறவுத் துறை அதிகாரத்தையும் மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கி ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு போவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்காக இப்போது கூட்டுறவு துறைக்கான தனி அமைச்சகம் ஒன்றிய அரசில் உருவாக்கப்பட்டு அது உள்துறை அமைச்சரின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ மாநிலங்கள் கூட்டுறவு அமைப்புகளை சரியாக நிர்வகிப்பதில்லை, அவையெல்லாம் காலாவதியான அமைப்புகளாக இருக்கின்றன, அவற்றை நவீனமயப் படுத்த வேண்டும், இந்தியா முழுவதற்கும் ஒரே விதமான நோக்கம் கொண்டதாக கூட்டுறவு இயக்கம் இருக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். ஒன்றிய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு கூட்டுறவுத் துறையை மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என வலுவான எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் தமிழ்நாடு முதலமைச்சராவார். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு இந்தப் பிரச்சனையிலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யத் தயங்கவில்லை. 

கடந்த அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகளைக் களையும் விதமாகவும், அவற்றையெல்லாம் நவீனப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைத்து சட்ட மசோதா ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நாட்கள் பல கடந்தும் அங்கேயே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவோம் என்று ஒரு புறம் பேசிக்கொண்டு இன்னொரு புறம் ஆளுநர் மூலமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவுத் துறையை முடக்குகிற வேலையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவது அல்ல அவர்களது நோக்கம், மாறாக அதைக் கைப்பற்றிக் கொள்வது தான் என்பதை இந்த அணுகுமுறையின் மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம்.

 தேசிய அளவில் கூட்டுறவுக்காகக் கொள்கை ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிற உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அதற்காக 47 பேர் கொண்ட குழு ஒன்றையும் நியமித்திருக்கிறார். தேசிய அளவில் கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கிய போது தமிழ்நாட்டுக்கென தனியே கல்விக் கொள்கையை உருவாக்குவோம் எனக் கூறி அதற்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வல்லுனர் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார். அதுபோல புதிதாக கூட்டுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கும் வல்லுநர் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் இருக்கும் மேடையில் இந்த வேண்டுகோளைத் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கிறேன்.

கூட்டுறவு இயக்கம் ஆரம்பித்த இந்த 120 ஆண்டுகளில் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதை ஜனநாயகப்படுத்துவதற்கென்று பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது. இப்போது கூட்டுறவு சங்கங்களில் இயக்குனர்கள் பதவிகளில் பட்டியல் இனத்தவருக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் பட்டியல் சாதியினருக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு இல்லை. இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் தற்போது கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பொறுப்புகளில்18% க்குப் பதிலாக 5% என்ற அளவில்தான் எஸ்சி பிரிவினர் இருக்கின்றனர். 

கடந்த வாரத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எமது கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துக் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற நிலையை மாற்றி அங்கும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே கூட்டுறவுத் துறையை நிர்வகித்த அனுபவம் கொண்ட மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் இதற்காக மாண்புமிகு முதலமைச்சரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன், வணக்கம்! 


(15.11.2022 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்றுப் பேசியதன் சுருக்கம் )