தமிழர் நலன் காக்கும் ‘தளபதி’ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் - ரவிக்குமார்

Views : 1156

பதிவு செய்த நாள் 01-Mar-2023

தமிழர் நலன் காக்கும் ‘தளபதி’ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் - ரவிக்குமார்

“ நான் ஐந்து மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள். கைக்குழந்தையாக தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த தலைவர் கலைஞருக்குக் காட்டினார்கள். நான் 12 வயது பையனாக இருந்தபோது மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டப்படி தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்படுகிறார். முரசொலிமாறன் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் மிசாவில் கைது. கோபாலபுரம் வீட்டில் ஓர் அறையாகத்தான் சிறை இருந்தது. அதுதான் என்னை செதுக்கியது” என நேற்று (28.02.2022) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான அண்ணன் தளபதி அவர்கள் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த காலம் . நான் பள்ளி மாணவன். திமுக தலைவர் கலைஞர் முரசொலியில் எழுதுகிற ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கின்ற பல்வேறு அர்த்தங்களைக் கண்டுபிடித்து விவாதித்து மனம் சிலிர்த்த பொழுதுகள் அவை. சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் திமுக தொண்டர்களில் ஒருவராக தளபதி அவர்களின் பெயர் அப்போதுதான் என் மனதில் பதிந்தது. அதன் பின்னர் சிட்டிபாபுவின் சிறைக் குறிப்புகளைப் படித்தபோது அவரைப் பற்றிய மதிப்புப் பன்மடங்கு உயர்ந்தது. அரசியல் வாழ்வில் சிறை செல்வது இயல்புதானே எனச் சிலர் நினைக்கலாம் .அவர் இருந்தது அவசரகாலக் கொடுஞ் சிறை. அதன் பயங்கரம் என்ன என்பதை இன்றைய தலைமுறை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அதைப்பற்றி அவரே கூறிய செய்திகள் இவை :

“ இந்த இரவில் நான் மூன்றாவது செல்லுக்கு மாற்றப்பட்டிருந்தேன். அங்கே அன்றிரவு நான், ஆற்காட்டார், சிட்டிபாபு, நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தன் என ஐந்து பேர் இருந்தோம். ஐந்தாவது செல்…நாலாவது செல் என ஒவ்வொன்றாக முடிந்து அடுத்து எங்கள் செல்லின் அந்த இரும்புக் கதவு திறந்தது.

“வாங்கடா வெளீல…”என்று பெருங்குரல் வந்தது! அண்ணன் சிட்டி பாபு எதையும் வேகத்துடன் எதிர்த்து நிற்பவர். அவரே முன்னால் சென்றார்.

“வாடா, நீ தான் சிட்டிபாபுவா?” என்று அவர் கன்னத்தில் இறங்கியது அடி! தொடர்ந்து இதே மாதிரி பளீரென்று இறங்கின லத்தி அடிகள்..

ஆற்காட்டாருக்கும் அதே வரவேற்புதான். “நீதாண் வீராசாமியாடா?” என்று அவரை அடித்த அடிகளில் அவர் நெடுமரம்போல அப்படியே சாய்ந்து விட்டார்.

“வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதியோட பையனா?” என்று கண்களில் கொலை வெறியுடன் கேட்டபடியே ஒருவன் என் கன்னத்தில் இடி மாதிரி ஒரு அறைவிட, எனக்கு அப்படியே பார்வையே தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அடுத்தது லத்தியால் முழங்கையில் விழுந்தது முதல் அடி.. அவ்வளவுதான்! ‘ஐயோ..’ என்று நான் சுருண்டு முழங்கையைப் பிடித்தபடியே அப்படியே நினைவு இழந்து விழுந்துவிட்டேன். அப்புறம் எத்தனை அடிகள் விழுந்ததோ தெரியவில்லை. அப்புறம் அறையில் வைத்து எங்களைப் பூட்டின பின் என் செல் தோழர்கள் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிய பின்புதான் நான் விழித்தேன்.

வாங்கிய அடியில் ஆளுக்கொரு பக்கம் உடம்பைப் பிடித்து முக்கி முனகியபடி இருந்தார்கள் அனைவரும்! அதிலும் சிட்டிபாபு அண்ணன், சுருண்டு மயக்கமாகி விழுந்து விட்ட என்மேல் அடிகள் எதுவும் விழக்கூடாது என்று என்மேலே குறுக்கே படுத்து அந்த அடிகளை முழுசாகத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

என் முகத்தை நசுக்க வந்த பூட்ஸ் காலைத் தன் உடம்பில் ஏந்தியிருக்கிறார். என்னை அடிக்க வந்தவர்கள் பூட்ஸால் நசுக்கி ஆத்திரத்தில் அவர்மேல் ஏறி மிதித்ததில், அவருடைய கல்லீரல் ரொம்ப பாதிப்படைந்து விட்டது (இந்த மரண அடிகளே அவருக்கு வினையாக முடிந்து அவர் இன்னுயிரை சிறையிலேயே பறித்துக் கொண்டது) அப்புறம் அங்கே நினைவற்று விழுந்து கிடந்த சிட்டிபாபு அண்ணனைத் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டோம்! அந்த இடமே சுடுகாட்டின் மௌனத்தைவிட மோசமாக இருந்தது! என்ன பேசுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?

எல்லோருக்குமே பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது. “ இப்படி மிசா கால சித்ரவதை என்னும் தீயில்

 புடம்போடப்பட்டவர்தான் அண்ணன் ’தளபதி’ அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரை சந்திக்கப் போகும் போதெல்லாம் நேர்காணலுக்குச் செல்லும் படபடப்போடுதான் நான் போவேன். அவர் எங்கிருந்து பேச்சைத் தொடங்குவாரென்றே நாம் யூகிக்க முடியாது.அவரிடம் உரையாட தினசரி அரசியல் நடப்புகள் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால் போதாது. அவரது பேச்சு தமிழக அரசியல் வரலாற்றின் ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும்,அல்லது சங்க இலக்கியத்தில் ஆரம்பிக்கும், அல்லது நாம் சாதாரணமாகக் கேள்விப்பட்டிருக்க முடியாத ஒரு சிற்றிதழில் வந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும். அவரது பேச்சின் நூல் பிடித்துப் பேசுவது அவ்வளவு எளிதல்ல. அப்படியொரு தலைவரோடு இருந்து அரசியல் செய்வது சாமான்யமானதல்ல . அவரது அறிவாற்றல், அவரது உழைப்பு, தொண்டர்களிடம் காட்டும் அரவணைப்பு, தமிழக மக்களின் அடிப்படையான பிரச்சனைகள் குறித்த அக்கறை - இப்படிப் பல விஷயங்களில் அவருக்கு ஈடுகொடுப்பது எளிதான விஷயமில்லை. அவரது மகனாக இருப்பது ஒருவிதத்தில் கொடுப்பினை என்றால் இன்னொருவிதத்தில் அதுவே மிகப்பெரிய சவால்.ஒவ்வொரு அசைவிலும் தலைவர் கலைஞர் அவர்களோடு ஒப்பிடப்பட்டு எடைபோடப்படும் ஆபத்து அதில் இருக்கிறது. இன்று தலைவர் கலைஞர் இல்லாத நிலையில் அண்ணன் தளபதி அவர்கள் அந்த சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குறைசொல்ல முடியாத அவரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகத்தான் துணை முதல்வர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. அவர் துணை முதல்வராக இருந்தது மட்டுமல்ல முதல்வராக இருந்த கலைஞர் அவர்களுக்குத் துணையாக இருந்து பல பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தொழிற்துறையை அவர் நிர்வகித்தவிதம் அதிகாரிகளிடம் அவரைப்பற்றிய மதிப்பை அதிகரிக்கச் செய்தது. நேர்மைக்குப் பேர்போன அதிகாரிகள் அவரது ஆற்றலை மனம் திறந்து பாராட்டக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் பழிவாங்கும் நோக்கில் எல்லோர் மீதும் வழக்கு போட்ட ஜெயலலிதா அவர்களால் தளபதி அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடுக்க முடியவில்லை.

குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தரவேண்டும் என்ற எனது கோரிக்கை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் செயல்வடிவம் பெற்றது. அந்த மகத்தான திட்டத்தின் முதல் வீட்டுக்கு நான் எம்.எல்.ஏ வாக இருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வல்லம்படுகை என்னும் சிற்றூரில் அண்ணன் தளபதி அவர்கள் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு இருப்பதைப்போல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் எஸ்சி எஸ்டி பகுதிகளுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் விசிக சார்பில் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார். அதுமட்டுமல்லாமல், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைககேற்ப எஸ்சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையை ஏற்று சுமார் 1300 இடங்கள் தலித் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதலாகக் கிடைப்பதற்கு வழிவகுத்தார். இப்போதும் கூட அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தான் கடந்த பல ஆண்டுகளாகக் கோரிக்கையாக விசிக எழுப்பி வந்த மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் தளபதி அவர்கள் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து அவர் வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர். அதிலும் குறிப்பாக வகுப்புவாதமே இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து என்ற நிலையில் அதை உறுதியோடு அவர் எதிர்ப்பாரா என்று கேள்வி எழுப்பினர். அந்த ஐயங்களை நீக்கும் விதமாக தி இந்து தமிழ் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி அமைந்தது ( 28.01.2018 ) “நான் மதவாத அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக்கிட்டிருக்கேன்…எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என ஆணித்தரமாக அவர் அறிவித்தது அவதூறு பரப்பியவர்களின் வாயை அடைத்தது.

அதே உணர்வோடுதான் “ மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு, செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக சீர்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்” என்று அவர் நேற்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

சமூகநீதியைக் காப்பதற்காக இந்திய அளவிலான தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியபோது அவருக்கு பிரதமர் ஆகும் ஆசை வந்துவிட்டது என எதிர்க்கட்சியினர் சிலர் ஏளனம் செய்தனர்.

“ பொது வாழ்வை பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத் தான் அப்போதும் இருந்துள்ளது இப்போதும் இருக்கிறது. அதற்குக் காரணம் எனது குறிக்கோள் என்பது பதவியாக- பொறுப்பாக மட்டும் இருந்ததில்லை. கொள்கையாக இருந்தது. சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இன எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் - இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான்.

இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள். இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல தத்துவத்தின் அடையாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகிறேன்” என்று தனது இலக்கு என்ன என்பதை அவர் விளக்கமாக எடுத்துரைத்திருக்கிறார்.

அரசியல் போராட்டத்தில் களம் கண்ட வீரனாக இருந்து விழுப்புண் தாங்கியவர் அவர். இன்று தமிழ் நாட்டின் உரிமைகளெல்லாம் பறிக்கப்படும் நிலையில் ’தமிழர் உரிமை காக்கும் பெரும் போரில்’ தளபதியாக இருக்கவேண்டும் என காலம் அவருக்குக் கட்டளையிட்டிருக்கிறது. அதை ஏற்று தமிழ்நாட்டின் முதல்வராக மட்டுமின்றி போராட்ட களத்திலும் அவர் முதல்வராக நிற்கிறார். மார்ச் 1 இல் பிறந்த நாள் காணும் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்