
அண்ணாவும் கூட்டாட்சியும்
ரவிக்குமார்
==
மாநில அரசுகளுக்கிடையே பாகுபாடு காட்டுவது ஒன்றிய பாஜக அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. வரி வருவாயைப் பகிர்வதிலும், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் தனது கட்சி ஆளும் மாநிலங்களை ஒரு விதமாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை இன்னொரு விதமாகவும் ஒன்றிய பாஜக அரசு அணுகுகிறது.
கட்சியின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் போக்கு இந்த அளவுக்கு இல்லையென்றாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இருக்கவே செய்தது. ஆனால் மாநிலங்களை அணுகுவதில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என காங்கிரஸ் ஆட்சியின்போது காங்கிரஸ் உறுப்பினரே பேசிய முன்னுதாரணமும் இருக்கிறது. 1962 இல் அறிஞர் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது தான் ஆற்றிய உரையைத் தம்பிக்குக் கடிதமாக 01.07.1962 அன்று தீட்டியிருக்கிறார். அக்கடிதத்தில் அதை அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா பேசும்போது பின்வரும் தகவலைப் பதிவு செய்திருக்கிறார்: “முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப் படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும், இந்திய யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள்போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம்? வெளியே எடுத்து விடுகிறோம்! அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம்.” அதுபோல இந்தப் பாகுபாடும் களையப்படவேண்டும் மாநிலங்களின் தனித் தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அண்ணா வலியுறுத்தியுள்ளார்.
”பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் கட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்காக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன்.” என்று தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்திய அவர், ” பொருளாதார ஏற்றத் தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை. ஆனால், திட்டங்களை நிறைவேற்றியதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். ” என்று அழுத்தம் திருத்தமாகத் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.
வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்டால் நீங்கள் முதலில் உற்பத்தியைப் பெருக்குங்கள் என ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய அண்ணா தனக்கேயுரிய கேலியோடு ஒரு உதாரணத்தை முன்வைத்திருக்கிறார்: “ உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பெஆருளாதாரப் பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம் விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும். உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது.” என அவர் சாடியுள்ளார்.
16 ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வு 41% ஆகவே தொடரும் என அறிவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஜிஎஸ்டி வரி வருவாயில் செஸ் என்றும் சர் சார்ஜ் என்றும் போட்டு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் தொகையையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொள்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களுக்கு அண்ணா சொன்பதையே நாம் நினைவுபடுத்த வேண்டியுள்ளது ”பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்காது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர்களுக்கு எங்கள் மாநிலத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது மாநில சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூற வேண்டி இருக்கிறது” என அண்ணா தனது பேச்சில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
பணக்காரர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் காட்டப்படுகின்றன. அதை சுட்டிக்காட்டினால் அவர்களெல்லாம் இந்திய நாட்டு முதலாளிகள்தானே என தேசியவாதம் பேசுகிறது பாஜக அரசு. அந்த வாதத்துக்கும் அண்ணா 55 ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொல்லியிருக்கிறார்.
“கொள்ளைக்காரன், கன்னக்கோலன், காது அறுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் போன்றார் திருடுகிறார்களே, அந்தச் செல்வமெல்லாம்கூட இங்கே தான் இருக்கிறது, நம்முடைய நாட்டிலேயேதான்! அவர்கள், களவாடியதை கனடா நாட்டுக்கோ, காங்கோ நாட்டுக்கோ, ஆஸ்திரே-யாவுக்கோ, அர்ஜெண்டினா வுக்கோ கொண்டோடிவிடவில்லை; இங்கேயேதான் இருக்கிறது; இந்த நாட்டிலேயேதான் புண்ய பூமியாம் பாரத நாட்டிலேயே இருக்கிறது. ஆகவே பொருள் களவு போய்விட்டதே என்று கூச்சல் எழுப்பாதே; உன் பொருள் வேறு எந்த நாட்டுக்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே, உன் சொந்த நாட்டிலேயே இருக்கிறது என்று எவனும் கதைக்காகக்கூட பேசத் துணியமாட்டான். ஆனால், நாடாள வந்துள்ள நல்லவர்கள், துணிந்து பேசுகிறார்கள், ஏழையின் வயிற்றில் அடித்து முதலாளிகள் குவிக்கும் பணம் வேறு எங்கும் போய்விடவில்லை, இந்த நாட்டிலேயே இருக்கிறது என்று!” என அண்ணா கோபத்தோடு கூறிய வார்த்தைகள் (இட்லர்கூட சோஷியலிசம் பேசினான்! 07-08-1966 ) இன்றைய ஆட்சியாளர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன. ஏனெனில் இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.
இன்றைய பாஜக அரசு எதற்கெடுத்தாலும் ஒரே நாடு என்கிறது. அதன்மூலம் மாநிலங்களின் தனித்தன்மையை அழிக்கப் பார்க்கிறது. இந்தியா ஒரு ஒன்றியம் என்றுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அந்த உண்மையை அழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரேயொரு மதம் என ஆக்கப் பார்க்கிறார்கள். இந்தப் பாசிச செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கான கருத்தியல் வலிமையை நமக்கு அண்ணாவின் சிந்தனைகள் வழங்குகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உறுதியோடு வெளிப்படுத்திய சனாதன எதிர்ப்பை; மாநில உரிமைகளுக்கான , கூட்டாட்சிக்கான முழக்கங்களை சமரசமின்றி முன்னெடுக்க உறுதியேற்போம்.



