
செல்வி ஜெயலலிதா - தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரையும் ஈர்க்கும் ஆற்றலோடு விளங்கியவர். ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் ஆளுமையாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இந்தியப் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்னர் 2016 இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து முதல்வராகி சாதனை படைத்தவர். ' தமிழகம் முழுதும் கிளைபரப்பி நிழல் தந்துகொண்டிருந்த பெரும் விருட்சமாக' போற்றப்பட்டவர்.
' பெரிய மரமொன்று விழும்போது நிலம் அதிரும்' என சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்த விருட்சத்தின் நிழலில் இளைப்பாறியவர்கள் என்ன செய்வார்களென்றோ, அதில் அடைந்திருந்த பறவைகள் எங்கு போகுமென்றோ சிந்தித்ததில்லை.
செல்வி ஜெயலலிதா அவர்களுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியல் சூழலைக் கற்பனை செய்து பார்க்கும்போது மனதில் ஒருவித அச்சம் சூழ்ந்துகொள்கிறது. தமிழ்ச் சமூகம் கூறுபடும், ஆங்காங்கே அடிப்படைவாத சக்திகள் தலையெடுக்கும், எங்கும் ஒருவித குழப்பமே கோலோச்சும் என்ற அச்சம் அது.
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து”
எனத் தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில் பனம்பாரனாரும் ;
"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு"
என சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்திருந்தாலும் சேர, சோழ, பாண்டியர் - என மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தமிழ்நாட்டில் தமிழர் என்ற ஒருமித்த உணர்வு அப்போது இருந்ததெனக் கூற முடியாது.
சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பகுதி மக்களை ஒன்றிணைக்கக்கூடிய அரசியல் முழக்கங்களைத் திராவிட இயக்கம்தான் முன்வைத்தது . வட இந்திய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என்ற அரசியல் உத்திகளின் பின்னே தமிழ்நாட்டு மக்களைத் திரட்ட அது முயற்சித்தது. அதன் பின்னர் ஈழத்தமிழர் சிக்கலை முன்வைத்து தமிழரைத் திரட்ட அரசியல் கட்சிகள் முயற்சித்தன. ஈழத்தமிழர் சிக்கல் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் மெள்ள மெள்ள இங்கே தமிழர் என்ற உணர்வு மங்கத் தொடங்கியது. இன்று காவிரி சிக்கலும்கூட ஒட்டுமொத்தத் தமிழரை ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது என்பதைப் பார்க்கிறோம். இந்நிலையில் பிரதேசம், சாதி, மதம் கடந்து தமிழ்நாட்டு மக்கள்மீது தாக்கம் விளைவிக்கக்கூடிய , அவர்களை உணர்வுரீதியாக ஒன்றிணைக்கக்கூடிய ஒரு ஆளுமை உருவாவது அவ்வளவு எளிதானதல்ல.
திரைப்படம் ஏற்படுத்தித்தந்த சாதகமான வெளியைத் திட்டமிட்ட முறையில் அரசியல் தளத்தில் பயன்படுத்தி ஒரு ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு அவரைப்போல வெகுசன ஈர்ப்புகொண்ட தலைவர் எவரும் தமிழ்நாட்டில் உருவாகவில்லை. அவரது புகழ் ஒளியைப் பிரதிபலிப்பவராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினாலும் தனது கூர்மையான அறிவுத் திறனால் தன்னை தனித்துவமானதொரு தலைவராக நிலைநிறுத்திக்கொண்டவர் செல்வி ஜெயலலிதா.
எம்ஜிஆரைப் போன்ற ஈர்ப்புகொண்ட ஆளுமைகளின் முன்னால் தாமே முன்வந்து தம்மை வெகுமக்கள் அர்ப்பணித்துக்கொள்வார்கள். அந்த அர்ப்பணிப்பு திருவிழாவின் கொண்டாட்டத்தோடு நிகழும். அந்த வெகுசனத் திரள் இயல்பூக்கமற்றதுதான் எனினும் அங்கே மௌனம் நிலவாது.
எம்ஜிஆரைப் போல ஒரு வெகுசனப் பித்துநிலையை உருவாக்கும் ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையிலும் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஏற்கனவே திரைப்படத்துறை உருவாக்கித் தந்திருந்த விளம்பரத்தோடு தனது புத்திக் கூர்மையை இணைத்து அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை நிர்மாணித்துக்கொண்டவர் செல்வி ஜெயலலிதா. மக்கள் வழங்கிய அதிகாரத்தைக்கொண்டே அவர்களைத் தன் முன்னே தண்டனிடச் செய்து காட்டியவர் அவர். மக்களாட்சி முறையின் எல்லைகளை உணரச்செய்ததோடு மக்களாட்சிக்கும் (democracy) கும்பலாட்சிக்கும் (mobocracy) இடையே உள்ள தொலைவு மிகவும் குறைவுதான் என்பதை அம்பலப்படுத்திய ‘பெருமையும்’ அவரையே சாரும்.
ஈர்ப்பு சக்தியும் அதிகாரத்துவ நடைமுறையும் இணையும்போது குடிமக்களிடையே உண்டாக்கப்படும் சரணாகதி நிலை விழாக்காலக் கொண்டாட்டத்தை அழித்து சமூக வெளியில் மௌனத்தைத் திணிக்கிறது. நிர்க்கதியாகக் கைவிடப்பட்ட மக்கள் திரளிலிருந்து ஓலமும்கூட எழுவதில்லை, அதன் முணுமுணுப்புகளும் அரற்றல்களும் எவரது செவிகளையும் எட்டுவதில்லை.
சினிமா செல்வாக்கும் அதனால் கிடைத்த மக்கள் ஆதரவும் எம்ஜிஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பலமடங்காகப் பெருகச்செய்தன. செல்வி ஜெயலலிதாவின் அதிகாரத்துவ அணுகுமுறையை வெகுமக்கள் ஏற்றுக்கொள்வதற்கும் அவைதான் அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இருக்கிற ஒற்றுமை ஒன்றுதான் - இரண்டுமே சாதி, மதம், பிரதேசம் கடந்த செல்வாக்குக் கொண்டவையாக இருக்கின்றன.
திரைப்படப் புகழ்தான் இன்றைய தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களை இணைத்து வைத்திருக்கும் சங்கிலியாக இருக்கிறது. இந்த அருவமான சங்கிலி உடைபடுவது அதில் கட்டுண்டு கிடக்கும் வெகுசனத் திரளுக்கு விடுதலைதான். ஆனால், அப்படி விடுபடும் மக்கள் திரள் சாதி,மத, இன கொட்டடிகளுக்குள் சென்று பாதுகாப்புத் தேடும் ஆபத்து இன்று அதிகம் இருக்கிறது. ஏனெனில் விடுதலையின் அச்சத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த வெகுசனத் திரளுக்கு சுதந்திரம் என்பதே மறந்துபோன ஒன்றாகிவிட்டது.
வெகுசனத் திரள் சமத்துவ, ஜனநாயகக் கருத்தியலால் உந்தப்படாத நிலையில் ‘அதிகாரத்துவமாவது அவர்களைப் பிணைத்துவைத்திருந்ததே’ என்று ஆறுதல் கொள்கிற அவலச் சூழலுக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
தமிழ்நாடு இப்போது ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறது. சாதி, மத நலன்களை முன்னிறுத்தாமல் தொலைநோக்குப் பார்வையோடு எதிர்காலம் குறித்து சிந்தித்துச் செயல்பட ஜனநாயக சக்திகள் உடனடியாக முன்வரவேண்டும். இல்லாவிடில் இது வெறுப்புப் பிரச்சாரகர்களின் வேட்டைக்காடாகிவிடும், எச்சரிக்கை! .
( 2016 டிசம்பர் 5 அன்று செல்வி ஜெயலலிதா மறைந்த நாளில் எழுதிய அஞ்சலி) அதிகாரத்துவத்தால் மக்களைப் பிணைத்தவர்
- ரவிக்குமார்



