சமூகநீதி பேசுபவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா? - ரவிக்குமார்

Views : 7

பதிவு செய்த நாள் 26-Nov-2025

நவம்பர் 26 ஆம் நாள் இந்திய ஒன்றிய அரசால் அரசமைப்புச் சட்ட நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரலாற்று நகை முரணா? அல்லது மக்களை ஏமாற்றும் உத்தியா ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 


1950 ஆம் ஆண்டிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனிகளுடைய தாக்குதலின் இலக்காக அரசமைப்புச் சட்டம் இருந்து வருகிறது .அதை மாற்றிவிட்டு வேறொரு அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என வாஜ்பாய் காலத்திலிருந்தே பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது ஏன் அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டாடுவதாக நடிக்கிறார்கள்? ஏனென்றால் அரசமைப்புச் சட்டம் என்பது கோடிக்கணக்கான மக்களால் புனித நூல் போலக் கருதப்படுகிறது. அதற்கு ஊறு செய்தால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால் அதை வெளிப்படையாகச் செய்ய முடியாத நிலை பாஜகவுக்கு. 


அரசமைப்புச் சட்டத்தில் அவசியமானத் திருத்தங்களைச் செய்துகொள்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் அதிகாரம் அளித்துள்ளார். “ இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ இந்த சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிலுள்ளது போல அரசியல் சாசனத்தைத் திருத்த விசேட நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மிகவும் எளிதான நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.


நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை, இந்த உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டுவந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன்” என அரசியல் நிர்ணய சபையில் அவர் உரையாற்றும்போது குறிப்பிட்டார். அவர் கூறியதற்கேற்ப நமது அரசமைப்புச் சட்டத்தில் 100 க்கும் மேற்பட்டத் திருத்தங்கள் ( amendments ) செய்யப்பட்டுள்ளன.


நமது அரசமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக அதில் செய்யப்பட்டத் திருத்தங்களை அது ஏற்றுக் கொண்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ”நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ”இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதிக் காலத்திலும் சரி, யுத்த காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது” என அரசமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.


இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக இருக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மதச் சிறுபான்மையினர் முதலானவர்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும் மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசமைப்புச் சட்டம் தான் காரணம். அதுமட்டுமின்றி இந்தியா ஒரே நாடாக நீடிப்பதற்கும்கூட அரசமைப்புச் சட்டமே காரணம். ஆனால் சனாதனிகள் மட்டுமின்றி சமூகநீதியை ஆதரிப்பவர்களும்கூட அதைத் தாக்குவதைப் பார்க்கிறோம். மனு சட்டத்தை எரிப்பதில் ஆர்வம் காட்டாத அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதை உற்சாகத்துடன் செய்கின்றனர். 


அரசமைப்புச் சட்டம் என்பது எந்தத் திருத்தமும் செய்யப்படக் கூடாதப் ‘புனித நூல்’ அல்ல. ஆனால் அதை எரித்துத் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா? அதுவும் சனாதனவாதிகளின் பேராபத்துச் சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதுதானா? என நாம் சிந்திக்க வேண்டும்.


’அரசமைப்புச் சட்டத்தை எரிப்பேன்’ என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே என அதற்கு மறுப்புச் சொல்லக்கூடும்.


1953 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மொழி அடிப்படையில் ஆந்திர மாநிலம் அமைப்பது பற்றிய மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசும்போதுதான் அவ்வாறு குறிப்பிட்டார். அங்கே பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறையிலிருந்து எஸ்சி மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்க அன்றைய உள்துறை அமைச்சர் கே.என். கட்ஜு எதுவும் செய்யவில்லையெனக் கடுமையாக விமர்சித்தார்.


“பெரும்பான்மையினர் தவறு செய்துவிடுவார்கள் என்று அஞ்சும் சிறுபான்மைச் சமூகங்களின் அச்ச உணர்வுகளை அகற்றுவதன் மூலம்தான் பிரிட்டிஷ் பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியல் சட்டத்தை நான்தான் உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. இது யாருக்கும் பயன்படுவதாக இல்லை. ஆனால், அது எதுவாக இருந்தாலும், நம் மக்கள் அதைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள விரும்பினால், இந்த நாட்டில் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள், சிறுபான்மையினர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.


‘ஐயோ, முடியாது, உங்களை அங்கீகரிப்பதென்பது ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று சிறுபான்மையினரை அவர்களால் புறக்கணிக்க முடியாது. சிறுபான்மையினரைக் காயப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு வரும் என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார் .


அம்பேத்கர் அப்படிப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலங்களவையில் பல உறுப்பினர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள்.


அந்த விமர்சனங்களுக்கெல்லாம் 19.03.1955 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். “கடந்தமுறை நான் பேசும் போது அரசியல் சாசனத்தை எரிப்பேன் என்று கூறியதாக இங்கே என் நண்பர் ஒருவர் கூறுகிறார். ஆமாம், ஆனால் அன்று அவசரத்தில் நான் அதற்கான காரணத்தை அப்போது விளக்கிக் கூறவில்லை. இப்போது என் நண்பர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார், நான் அப்படிச் சொன்னதற்கானக் காரணத்தை இப்போது விளக்க விரும்புகிறேன்.


அந்தக் காரணம் இதுதான்: ஒரு கடவுள் வந்து குடியேறுவதற்காக ஒரு கோயிலைக் கட்டினோம், ஆனால் கடவுளை அங்கே குடியேற்றுவதற்கு முன்பே அந்தக் கோயிலைப் பிசாசு கைப்பற்றிக்கொண்டால், கோயிலை அழிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? அதை அசுரர்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. அதை தேவர்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்றுதான் எண்ணினோம். அதனால்தான் நான் அதை எரிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன்” என அம்பேத்கர் கூறினார்.


“மொழிவாரி மாநிலங்களில் எஸ்சி மக்கள், சிறுபான்மை மொழிபேசுவோர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதைப்பற்றி உள்துறை அமைச்சர் இப்போதாவது பரிசீலிப்பாரா?” என்று தனது உரையில் அவர் கேட்டார்.


1953 இல் இருந்ததைவிட மோசமான நிலை இன்று உள்ளது. அம்பேத்கர் அப்போது வெளிப்படுத்திய அச்சம் இன்று மேலும் அதிகமாகி இருக்கிறது. திருத்தங்கள் ( amendments) வழியாக நாடாளுமன்றத்தின் மூலமாகவும், விளக்கமளிக்கிறோம் ( interpretations) என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் அரசமைப்புச் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படுகிறது. 


அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல அரசமைப்புச் சட்டம் என்ற கோயிலுக்குள் அவர் காலத்தில் இருந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான பிசாசுகள் குடியேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதற்கானத் தீர்வு, அரசமைப்புச் சட்டம் என்ற கோயிலை எரிப்பதல்ல, மாறாக அதில் குடியேற்றப்பட்டிருக்கும் ‘பிசாசுகளை’ விரட்டுவதுதான். 


(நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட நாள் )