தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராகப் பெருகும் வன்கொடுமைகள்

Views : 15

பதிவு செய்த நாள் 20-Nov-2025

2023 க்கான தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் உள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள்  - ரவிக்குமார் 



2023 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண மையை அறிக்கை இப்போது வெளியாகி இருக்கிறது. 

இந்தியா முழுவதும் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றபோதிலும் தமிழ்நாட்டின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது.


தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் எஸ்சி மக்களுக்கு எதிராக 1921 குற்றங்கள் நடந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு 1377 குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதைவிட சுமார் 400 குற்றங்கள் அதிகரித்து 2022ல் 1761 ஆக அந்த எண்ணிக்கை உயர்ந்தது. 2023 அது 1921 ஆக அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா முதலானவற்றில் 2022 ஆம் ஆண்டை விட எஸ்சி மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது அதிகரித்திருக்கிறது. 


2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 74 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 135 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகள் 100 பேர். பட்டியல் சமூக சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவில் 6 மாநிலங்களில் மட்டுமே அதிகமாக உள்ளன: கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு. 


எஸ்சி மக்களுக்கு எதிரான கலவரம் அதிக எண்ணிக்கையில் நடக்கும் நான்கு மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 66 கலவரங்கள் நடந்துள்ளன. 


பட்டியல் சமூகத்தினர் கொடுக்கும் புகார்களில் அடிப்படையில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை உண்மைக்கு மாறானவை என்று கூறித் தள்ளுபடி செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தான் இந்த வழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. அதில் தமிழ்நாடும் ஒன்று.


வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தேசிய சராசரி அளவுக்குத் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆனால் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் தேசிய சராசரி 21.2 சதவீதமாக இருக்கிறது தமிழ்நாட்டில் அது 37.7 சதவீதமாக உள்ளது. அதாவது தேசிய சராசரியைவிட சுமார் இரண்டு மடங்கு உள்ளது. 


பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள்வதில் நீதிமன்றங்களும் மெத்தனமாக இருப்பதாகவே இந்த அறிக்கையில் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு முன்னால் விசாரணையில் ஏற்கனவே இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 6410, 2023 ஆம் ஆண்டு புதிதாக அனுப்பப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1502 . விசாரணையை எதிர்நோக்கி உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 7912 ஆகும். 21 வழக்குகளை விசாரணை இல்லாமல் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் 115 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது 830 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் தண்டனை அளிக்கப்படும் சதவீதம் மிக மிகக குறைவாக இருக்கிறது. 12. 2% வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தேசிய சராசரி 31.9% ஆக இருக்கிறது. தேசிய சராசரியில் பாதியளவுக்குக் கூட தமிழ்நாட்டில் தண்டனை வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் இந்த வழக்கை நடத்தும் அரசுத் தரப்பு இதில் கவனம் செலுத்தாததும், நீதிமன்றங்களும் போதிய அளவுக்கு இதில் அக்கறை காட்டாததும் தான். உத்தரப் பிரதேசத்தில் 65.6 சதவீத வழக்குகளில் தண்டனை வழங்கப்படுகிறது. பீகாரில் தண்டனை விகிதம் 30.1% ஆக இருக்கிறது ராஜஸ்தானில் 61.4% வழக்குகளில் தண்டனை வழங்கப்படுகிறது. 


2023 ஆம் ஆண்டில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் 172 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர் 1475 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


தமிழ்நாட்டில் எஸ்சிஎஸ்டி வழக்குகளில் கைது செய்த பிறகு அவர்கள் சீக்கிரமாகவே விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் 4343 பேர் அப்படி விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 326 பேருக்கு எதிராக மட்டும் தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 


2023 ஆம் ஆண்டு நிலவரமே இப்படி இருந்தால் 2024, 2025 ஆம் ஆண்டுகளின் நிலையப் பற்றி சொல்லவே தேவையில்லை. 


பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதில் தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இப்போதாவது இந்த அவல நிலையை மாற்ற முன்வருமா ?