சாதியால் பிளவுபடாமல் மொழியால் ஒன்றிணைவோம்!

Views : 12

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியை ஆந்திரா கர்நாடகா முதலான மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி கொண்டாடப்படுவதில்லை. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 50 ஆவது ஆண்டை அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையிலான அரசு 2006 இல் ஒரு விழாவாக எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ அவ்வளவாகப் பொருட்படுத்துவது இல்லை. ஏனென்றால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கு முன்பிருந்த சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவும், கர்னாடகாவும், கேரளாவின் சில பகுதிகளும் விடுபட்டுப் போயின. அதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு உண்டானதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது. எனவே நவம்பர் 1 ஆம் தேதியை ஒரு மகிழ்ச்சியான நாளாக இங்கே எண்ணுவதில்லை. அது ஒரு துக்க நாளாகவே கருதப்படுகிறது. எனவேதான் கர்னாடகத்தைப் போல ஆந்திராவைப் போல இங்கே அதைக் கொண்டாடுவதில்லை. 


மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்படுகிற நேரத்திலே அது குறித்து புரட்சியாளர் அம்பேத்கர் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. ஒரே மொழி, ஒரே மாநிலம் என்பது சரியானது என்று சொன்ன அம்பேத்கர் அதற்கான காரணங்களை எடுத்துக் காட்டினார். ‘ஒரு மொழி பேசுகிற மக்கள் இருக்கும்போதுதான் மனிதர்களுக்கிடையே உறவும் பிணைப்பும் இருக்கும். அந்த உறவு என்பது ஜனநாயகத்துக்கும், ஒரு நிலையான அரசு நடப்பதற்கும் அவசியம்’ என்று சொன்னார். அம்பேத்கர் கூறிய கருத்துக்களைக் கவனித்தால் அவர் நிலையான அரசு இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படி அவர் வலியுறுத்துகிற அதே நேரத்தில் இதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்தார்.“ மொழிவாரி மாநிலம் உருவாக்கப்படுகிற நேரத்தில் பிற நாடுகளிலும் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் இணைந்து வாழ்கிற சூழ்நிலை இருப்பதைப் போல இந்தியாவில் இணைந்து வாழ முடியாது. ஏனென்றால் இந்தியாவினுடைய அடிப்படை என்பது பிளவு படுத்துவதாக இருக்கிறது. ஆனால் பிற நாடுகளுடைய அடிப்படையானது ஒற்றுமைப்படுத்துவதாக இருக்கிறது”

என்று அவர் தெரிவித்தார். அவர் சொன்ன பிளவு படுத்துகிற கருத்தாக்கம் என்பது சாதி அமைப்புதான்.


மொழி அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த மாநிலத்தில் மொழி அடிப்படையில் ஒற்றுமை உருவாகிவிட்டதெனக் கூற முடியவில்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கு வாழும் மொழி சிறுபான்மையினர் அல்லாத மற்றவர்களிடம்கூட தமிழர் என்ற ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் அம்பேத்கர் குறிப்பிட்ட சாதி என்னும் பிளவுபடுத்தும் கருத்தியலை நாம் விடாமல் இருப்பதுதான். அதனால்தான் சாதி ஒழிப்பைத் தமிழ்த் தேசியத்தின் உள்ளீடாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கிறது. 


இன்று முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழினத்தின் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நம்மை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்வதற்கான சனாதனத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வேட்கை இப்போது ஆட்சி அதிகார உதவியோடு தீவிரமடைந்திருக்கிறது. அதை முறியடித்துத் தமிழினத்தைப் பாதுகாக்கும் கடமையே முதன்மையான அரசியல் கடமை என்பதை நாம் உணர வேண்டும். சாதியால் பிளவுபடாமல் மொழியால் ஒன்றிணைய வேண்டும். மொழிவாரி மாநில உருவாக்க நாளில் அதற்காக உறுதியேற்போம்!  


- ரவிக்குமார் 

நாடாளுமன்ற உறுப்பினர்