“கார் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி வரி சலுகையைத் தொடர வேண்டும்”

Views : 8

பதிவு செய்த நாள் 10-Oct-2025

நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்


மாற்றுத் திறனாளிகள் சிறு ரக கார் வாங்குவதற்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% ஜிஎஸ்டி வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறு ரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்பு மாற்று திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்கத் தேவையில்லை என நிதி அமைச்சகம் கூறிவிட்டதாக ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 


நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில் அந்த வரிக்குறைப்பு மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடையாது எனச் சொல்வது எவ்விதத்திலும் நியாயமல்ல. எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்குப் பிறகும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகையை வழங்க வேண்டும். 


மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வரி சலுகையானது வெறுமனே நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையல்ல, அது அவர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றி மற்றவர்களுக்கு இணையாக அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். 


எனவே, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் சிறிய ரக கார் வாங்குவதற்கு வழங்கப்பட்டுவந்த 10% ஜிஎஸ்டி வரிச் சலுகையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 


- ரவிக்குமார் எம்.பி