அக்டோபர் 10: குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும் என்ற எனது கோரிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட முதல் வீடு ஒப்படைக்கப்பட்ட நாள்

Views : 12

பதிவு செய்த நாள் 10-Oct-2025

 ‘குடிசைகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றவேண்டும்’ என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு 21 லட்சம் வீடுகள் கட்டும் ‘கலைஞர் வீடு கட்டும் திட்டம்’ தமிழ்நாடு அரசால் 2010 ஆகஸ்ட் 15 இல் துவக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் 2010 செப்டம்பர் 2 ஆம் நாள் அன்றைய துணை முதல்வர் தளபதி அவர்கள் சிதம்பரம் அருகில் வல்லம்படுகை என்னும் சிற்றூரில் முதல் வீட்டுக்கு அடிக்கல் நாட்டினார். 


2010 அக்டோபர் 10 ஆம் நாள் அந்த வீட்டை அன்றைய முதல்வர் கலைஞர் பயனாளியிடம் ஒப்படைத்தார். திருவாரூர் செல்லும் வழியில், முதல்வர் கலைஞர் அக்டோபர் 9 இரவு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகையில் தங்கினார். 


அக்டோபர் 10 காலை 9.30 மணியளவில் திருவாரூர் புறப்பட்டார். அப்போது, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகையில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டார். துணை முதல்வர் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்த வீடு ஒரே மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை முதல்வர் கலைஞர் பார்வையிட்டார். வீட்டை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பயனாளி கணேசன் - கஸ்தூரி தம்பதியிடம் ஒப்படைத்து, "வீடு வசதியாக உள்ளதா' எனக் கேட்டார். 


“துணை முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டு, முதல்வர் கையால் எங்களுக்கு வீடு ஒப்படைக்கப்பட்டது, வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம். ஒவ்வொரு ஆண்டு வெள்ளத்தின் போதும் எனது கூரை வீடு பாதி மூழ்கி விடும். கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தோம். இனி எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போதுமான அளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரமாக வீடு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளது” என்று, பயனாளி கணேசன் கூறினார்.


பின், கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்களை அன்றைய மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனிடம் கேட்டறிந்தார். வல்லம்படுகை ஊராட்சியில் மொத்தம் 595 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு 82 வீடுகள் கட்டப்பட உள்ளன. வல்லம்படுகையில் 69, வேளக்குடியில் 13 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டும், 10 வீடுகள் முடியும் தருவாயிலும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். காலை 9.50 மணிக்கு வல்லம்படுகை வந்த முதல்வர், அங்கிருந்து 10.04க்கு புறப்பட்டு திருவாரூர் சென்றார். 


அமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு. பொன்முடி, திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்றைய காட்டுமன்னார்கோவில் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருந்த நான் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். 


படம்: 1. முதல்வர் கலைஞர் திறந்து வைத்த வீடு

2. அந்த வீட்டில் நான் குத்துவிளக்கு ஏற்றியபோது