நிகரி 2025 விருதுகள் வழங்கும் விழா

Views : 32

பதிவு செய்த நாள் 08-Oct-2025

சிதம்பரம் கீழ ரதி வீதியில் உள்ள ஓட்டல் அக்ஷயா அரங்கத்தில் நிகரி 2025 விருதுகள் வழங்கும் விழா 04.10.2025 சனி மாலையில் நடைபெற்றது. 


விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் நடத்திவரும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதற்கென 2013ஆம் ஆண்டு முதல் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. 


2025 ஆம் ஆண்டுக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழிய் துறை பேராசிரியர் ய.மணிகண்டனும், விழுப்புரம் மாவட்டம் கொடூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மு.ஏழுமலையையும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டுs சிறப்பிக்கப்பட்டனர். 


நிகழ்ச்சிக்கு ரவிக்குமார் எம்.பி தலைமை வகித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இரா.தி.சபாபதி மோகன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 


பேராசிரியர் கல்யாணி, கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் சௌந்தரராஜன், பேராசிரியர் அரங்க பாரி, ஆசிரியர் த.பாலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். 


ஆசிரியர் ஏழுமலை பேசும்போது: பழங்குடி இருளர் மக்களிடையே தான் செய்து வரும் பணிகளையும், அம்பேத்கர் இரவு பாடசாலை உருவாக்கி தனது கிராமத்தில் மாணவர்களுக்குத் தனிப் பயிற்சி அளிப்பதையும் எடுத்துக் கூறினார். இந்த விருது தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாக அவர் சொன்னார். 


பேராசிரியர் ய.மணிகண்டன் ‘மகாத்மா சகஜானந்தர்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சகஜானந்தர் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து திரட்டிய தரவுகளைக் காட்சிப்படுத்தி உரையாற்றினார். அம்பேத்கரும், பெரியாரும் முனைப்பாக அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு 1917 ஆம் ஆண்டிலேயே இந்தியா முழுவதும் அறியப்பட்ட சமூகச் சீர்திருத்தவாதியாக சகஜானந்தர் திகழ்ந்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தார். 


 மகாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் இருவரும் போற்றிப் பாராட்டிய ஒரு தலைவராக சகஜானந்தர் இருந்ததை சுதேசமித்திரன், தி இந்து முதலான நாளேடுகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எடுத்துக் கூறினார். 


நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்த சுவாமி சகஜானந்தரை இன்று அவர் பணியாற்றிய ஊரிலேயே யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. இதை மாற்றி அவருடைய பணிகளை இன்றைய தலைமுறையினர் அறியச் செய்வதற்கு விசிக முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 


நிகழ்ச்சியில் மேனாள் மாவட்டச் செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர்கள் தமிழொளி, மணவாளன், பெரியார், திலீபன், விடுதலைச் செல்வன், அறிவுக்கரசு, நீதி வள்ளல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆசிரியர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்.