அருந்ததி ராயின் நினைவுக் குறிப்புகள்

Views : 6

பதிவு செய்த நாள் 11-Sep-2025

டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு நேற்று இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அருந்ததி ராயின் இந்தப் புத்தகம் கதவுக்கு அருகில் காத்திருந்தது. 


இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். இதில் விவரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்கள் நேர்ப்பேச்சில் அவர் முன்பே பகிர்ந்துகொண்டவைதான். ஆனால், அவரது எழுத்தின் வலிமையில் அவை இலக்கியத் தரம் கொண்டவையாக மாறியிருக்கின்றன. 


அருந்ததியின் அம்மா கல்கத்தாவிலிருந்து ஊட்டிக்கு வராமல் மதுரைக்கு வந்திருந்தால் அவரது வாழ்க்கை என்ன ஆயிருக்கும் ? ஊட்டியிலிருந்து கேரளாவுக்குப் போகாமல் அஸ்ஸாமுக்கே போயிருந்தால் என்ன நடந்திருக்கும்? அவரது வாழ்க்கை மட்டுமல்ல எல்லோருடைய வாழ்க்கையும் அப்படித்தான் எந்தத் திட்டமிடலிலும் அது தீர்மானிக்கப்படுவதில்லை. விபத்துகள்தாம் அதன் போக்கை நிர்ணயிக்கின்றன. நான் ஐந்தாம் வகுப்பு முடித்ததும் எங்கள் கிராமத்திலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டரில் உள்ள ஆயங்குடிப் பள்ளம் என்ற ஊரில் இருந்த ஒரு உயர்நிலைப் பள்ளியில் என்னை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதென எனது அப்பா முடிவு செய்தார். ஆனால் நான் சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில்தான் படிப்பேன் என அடம் பிடித்து அதில் சேர்க்க வைத்தேன். அன்று அப்படி நான் பிடிவாதமாக இல்லாமல் போயிருந்தால் என் வாழ்க்கையே வேறு விதமாக ஆகியிருக்கும். சிதம்பரம் என்ற ஊருக்கு நான் படிக்கப் போனதுதான் இன்று நான் வந்தடைந்திருக்கும் இடத்துக்கான பாதையின் ஆரம்பம். மனிதர்களின் வாழ்க்கையை உருப்பெற வைப்பதில் ஊர்களுக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது. 


அருந்ததி ராயின் இந்தப் புத்தகம் ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற வேட்கையைத் தருகிறது. 1997 இல் அவரது முதல் நாவலைப் படித்தபோது ததும்பிய ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன். முழுவதும் படித்தபின் விரிவாக எழுத வேண்டும். 


- ரவிக்குமார்