எல். இளையபெருமாள் : பண்பாட்டு மூலதன மீட்பர்
ரவிக்குமார்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.6.1924 இல் இளையபெருமாள் பிறந்தார். தனது சிறுவயது முதலே சுயமரியாதையும், சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்றுமுறை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் 1980ல் எழும்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
1945 ஆம் ஆண்டிலிருந்தே சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடிவந்த இளையபெருமாள் 1952இல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். துணிச்சலும், அறிவாற்றலும் நிரம்பிய அவரது பேச்சு, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. அதனால், 1965 இல் இந்திய அளவில் ஆதிதிராவிட மக்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து பட்டியல் சமூக மக்களின் நிலையை ஆராய்ந்து 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 1969 ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்தார். ஒன்றிய அரசு 1989 இல் இயற்றிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டம் ஆகியவை இளையபெருமாள் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளால் வந்தவை
இளையபெருமாளின் முதன்மையான அரசியல் பங்களிப்பு என தலித் மக்களின் பண்பாட்டு மூலதனத்தை மீட்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிடலாம். 1901 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின் முன்னுரையில் சென்னை மாகாணத்தில் வாழ்கிற பறையர் சமூகத்தினர் குறித்துப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள் . “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பறையர் என்ற பெயர் எங்கும் இல்லை. எயினர் என்ற தொல்குடி பற்றிய விவரங்கள்தான் இருக்கின்றன. அவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்டவர்களாக, கிராமங்களில் வாழாமல் தமக்கென்று கோட்டைகள் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப்படுகின்றனர். ஆம்பூர், வேலூர் முதலான இடங்களில் அத்தகைய கோட்டைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. பறையர் சமூகத்தினரின் முன்னோர்களாக அவர்களே இருந்திருக்க வேண்டும். 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தச் சமூகம் பற்றி கூறப்பட்ட விவரங்களை வைத்துப் பார்க்கும்போது இது உயர்ந்த நிலையிலிருந்த ஒரு சமூகமாக இருந்தது, தற்சார்பு கொண்ட சமூகமாக இருந்தது என்பது தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்த சமூகம் எப்படி வீழ்த்தப்பட்டது? என நாம் சிந்திக்கவேண்டும்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்திய சாதி அமைப்பு சமூகப் படிநிலையை மட்டுமின்றிப் பண்பாட்டுப் படிநிலையையும் உருவாக்கி வைத்துள்ளது. தலித் மக்கள் தங்க நகைகள் அணியக்கூடாது, நல்ல உடைகளை உடுத்தக்கூடாது, காரை வீடுகளைக் கட்டக்கூடாது எனத் தடைகள் விதிக்கப்பட்டன. சமூகத்தால் இழிவானவை எனக் கருத்தப்பட்ட தொழில்களைச் செய்யும்படி வலிந்து திணித்துள்ளது. பறை அடித்தல், செத்த விலங்குகளை அகற்றுதல், ஈமக் கடன்களைச் செய்தல் முதலான இழி தொழில்கள் அதனால்தான் அவர்கள்மீது சுமத்தப்பட்டன. பின்னர் அவையே அவர்களது கலாச்சாரம் என திரிக்கப்பட்டது. இதை உணர்ந்தததால்தான் தலித் தலைவர்கள் இந்த இழி தொழில்களை எதிர்த்து தலித் மக்களின் பண்பாட்டு மூலதனத்தை மீட்பதற்காகப் போராடினர்.
இளையபெருமாளின் முயற்சியால் பறை அடித்தல் உள்ளிட்ட இழி தொழில்கள் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் முற்றாக ஒழிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் அதை அவர் எழுப்பினார். ‘தென்னிந்தியாவில் தொழிலாளர்கள் பலர் அவர்களது விருப்பத்துக்கு மாறாக செத்த கால்நடைகளை அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பறை அடிக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் குறைந்தபட்சக் கூலி சட்டத்துக்குள் வருமா?’ என்று அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தலித் மக்கள் பறை அடிக்க மாட்டோம் என மறுத்தபோது சாதியவாதிகள் வெளியூர்களிலிருந்து பறை அடிப்பதற்கு ஆட்களை அழைத்துவந்தனர். 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இளையபெருமாளின் ஊரான காட்டுமன்னார்கோயிலுக்கு அருகில் உள்ள குருங்குடி என்ற ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குப் பறை அடிப்பதற்காக வெளியூரிலிருந்து ஆட்கள் கொண்டுவரப்பட்டபோது அதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறை தலித்துகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பாண்டியன் (23) என்ற பட்டதாரி தலித் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். 12 தலித்துகள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர் ( The Hindu, 20.08.1985 ).
பறை அடிப்பதற்கு எதிரான போராட்டத்தை இளையபெருமாள் தொடர்ந்து முன்னெடுத்துவந்தார். 25.01.1991 இல் திண்டிவனத்தில் நடைபெற்ற வன்னியர் - ஆதிதிராவிடர் ஒற்றுமை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களில் பறை அடிப்பதற்கு எதிரான தீர்மானமும் ஒன்றாகும். “பறை அடித்தல், செத்த மாட்டை புதைத்தல், பிணம் சுடுதல் இன்ன பிற இழிவான செயல்களை செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது எனவும் அதை அந்தந்த சமுதாயங்களே செய்து கொள்வது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது” எனத் தீர்மானம் நிறைவேற்றி அதில் இளையபெருமாளும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் கையெழுத்திட்டனர். அவரது சமரசமில்லாத போராட்டங்களால்தான் இன்று வரையிலும் சிதம்பரம் பகுதி தலித் மக்கள் இழி தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டு உள்ளனர்.
1980 களின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ‘இந்திய மனித உரிமைக் கட்சி’ யை இளையபெருமாள் துவக்கினார். 1989 இல் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட தங்கராசு காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 1991ல் போட்டியிட்ட இந்திய மனித உரிமைக் கட்சி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. 1996 இல் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்ட இளையபெருமாள் 37159 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. 1998 இல் அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது அன்றைய முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது. முதுமையின் காரணமாக உடல் நலிவுற்று அவர் 08.09.2005 அன்று மறைந்தார்.
தலித் மக்களை இழி தொழில்களிலிருந்து விடுவித்து அவர்களது பண்பாட்டு மூலதனத்தை மீட்க அவர் நடத்திய போராட்டம் இன்னும் முற்றுப் பெறாமலேயே உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளைப்போல தமிழ்நாடு முழுவதும் பறை அடிப்பது உள்ளிட்ட இழி தொழில்கள் ஒழிக்கப்படும் வரையிலும் ஐயா எல்.இளையபெருமாளின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும்.