பட்டியல் சமூக மாணவர்களுக்கான ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு

Views : 10

பதிவு செய்த நாள் 21-Aug-2025

ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் தெரியவந்த உண்மை 


===


“ அ) பட்டியல் சாதியினர் மற்றும் பிற தகுதியுள்ள பிரிவுகளுக்கான தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் (NOS) திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை

கடந்த ஏழு ஆண்டுகளில் எவ்வளவு , ஆண்டுவாரியாகத் தெரிவிக்கவும்;


(ஆ) 2019 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக வழங்குக; 


(இ) எந்தவொரு மாநிலமும் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட தகுதியான விண்ணப்பங்களை தொடர்ந்து பெற்றுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள்;


(ஈ) அதிக தேவை இருந்தபோதிலும், NOS திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மொத்தம் 125 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, SC மாணவர்களுக்கு வெறும் 115 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பது உண்மையா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; மற்றும்


(இ) NOS இன் கீழ் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1,000 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா, குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்ட மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்கப்படுமா? , அப்படியானால், அதன் விவரங்களைத் தருக “ 

என்ற வினாக்களை இன்று மக்களவையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பினார். 


அதற்கு சமூகநீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்: 


“ கடந்த 7 ஆண்டுகளில் தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் (NOS) கீழ் உதவித்தொகை வழங்கப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பிற தகுதியுள்ள பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் முதல் இணைப்பில் தரப்பட்டுள்ளது ; 


(b) 2019 முதல் NOS திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்ற மாணவர்களின் மாநில/யூனியன் பிரதேச வாரியான விவரங்கள் இணைப்பு II இல் உள்ளன.


(c) முதல் (e): இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் அல்லாமல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஆன்லைனில் நேரடியாகப் பெறப்படுகின்றன. சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கும் பட்டியல் சமூக மாணவர்களுக்கென படிப்பு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்துகின்றன. 


NOS திட்டத்தின் கீழ் மொத்த இடங்களின் எண்ணிக்கை 2021-22 இல் 100 லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டது. இவற்றில், 115 பட்டியல் சாதியினருக்கும், 06 அறிவிக்கப்படாத நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினருக்கும், 04 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர் சமூக மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.”


இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை ரவிக்குமாரின் கோரிக்கை அடிப்படையில்தான் 100 இல் இருந்து 125 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், அந்த 125 பேருக்கும்கூட சரிவர உதவித்தொகை அளிக்கப்படுவதில்லை. 100 பேருக்கு ஸ்காலர்ஷிப் என வைத்திருந்த நேரத்தில் 2018-19 இல் 45 பேருக்கும்; 2019-20 இல் 41 பேருக்கும்; 2020-21 இல் 71 பேருக்கும்தான் இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. 


ஸ்காலர்ஷிப்பின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டபின் 2021-22 இல் 98 பேருக்கும்; 2022-23 இல் 98 பேருக்கும்; 2023-24 இல் 114 பேருக்கும் ; 2024-25 இல் 78 பேருக்கும் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்கள் ஏராளமாக வந்தாலும் போதிய நிதி ஒதுக்காததால் இந்தத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில்கூட எஸ்சி மாணவர்கள் பயனடைய முடியவில்லை. 


மாநிலவாரியாகப் பார்த்தால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள்தான் ஒப்பீட்டளவில் இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தில் அதிகம் பயனடைந்துள்ளனர். 2019 -20 முதல் 2024- 25 வரை ஒட்டுமொத்தமாக 6 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட 531 ஸ்காலர்ஷிப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 236 ஐப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 25 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். 


பட்டியல் சமூக மாணவர்களின் உயர்கல்விக்கான போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கும் போதிய நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு அந்த சமூக மாணவர்கள் அயல் நாடுகளில் சென்று படிப்பதையும் போதிய நிதி ஒதுக்காமல் தடுக்கிறது.