மாவட்ட நீதிமன்றங்களில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் - ரவிக்குமார்

Views : 38

பதிவு செய்த நாள் 19-Jul-2025

மாவட்ட நீதிமன்றங்களில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள்


- ரவிக்குமார் 


வாசிப்பதற்கான நல்ல நூல்களைப் பற்றிய பரிந்துரை எங்கிருந்து நமக்குக் கிடைக்கும் எனக் கணிக்கவே முடியாது. காலத்தை விரயப்படுத்துகிறது என நாம் சலித்துக்கொள்ளும் முகநூல் பதிவுகளிலிருந்தும்கூட அப்படியான பரிந்துரைகள் கிடைக்கக்கூடும். திரு இரா.பார்த்திபன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று எனக்கு வாசிப்பதற்கான புதிய கதவு ஒன்றைத் திறந்துவிட்டது. சென்னையில் சார்பு நீதிபதியாக உள்ள அவர் அறிமுகப்படுத்திய ஒரு நூல் அதிகம் கவனிக்கப்படாத மாவட்ட நீதிமன்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியது. 


‘ வாய்தாவுக்கு மேல் வாய்தா’ எனப் பொருள்படும் தலைப்பைக் கொண்ட அந்த நூலை பிரஷாந்த் ரெட்டியும், சித்ராக்‌ஷி ஜெயினும் எழுதியுள்ளனர். ( Prashant Reddy.T, Chitrakshi Jain: Tareekh Pe Tareekh - Justice - Reforms for India’s District Courts, Shimon & Schuster, NewcDelhi) மாவட்ட நீதிமன்றங்கள் என நூலின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்நூல் தெரிவித்துள்ள ஆலோசனைகள் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் பொருந்துவனவாக உள்ளன. 


மாவட்ட நீதிமன்றம் எதிர்கொள்ளும் முக்கியமான தடை தீர்ப்பளிப்பதில் சுதந்திரம் இல்லாத நிலையாகும். மாவட்ட நீதிபதிகள் அச்சம் இல்லாமல் தீர்ப்பளிக்க கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும். தாம் வழங்கிய தீர்ப்புகளுக்காகத் தாங்கள் விசாரிக்கப்படுவோமோ என்கிற அச்சம் மாவட்ட நீதிபதிகளுக்கு உள்ளது. அந்த அச்சம் களையப்பட வேண்டும். திறமை வாய்ந்த, அதிகாரம் உள்ள, எல்லோரும் எளிதில் அணுகக் கூடிய மாவட்ட நீதித்துறையை உருவாக்குவது அவசியம். அதை உருவாக்குவதற்கான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை இந்த நூல் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். 


அமெரிக்காவில் உள்ளது போல ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நீதித்துறை அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள இந்த நூலாசிரியர்கள், உயர் நீதிமன்றங்களில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு முக்கியமான அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள நீதித்துறை என்பது 170 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் அப்படியே அது நீடிக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 


மாவட்ட நீதிமன்றங்களை சீர்திருத்துவதற்கான ஆலோசனைகள் இந்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய திறமை கொண்ட கல்வியாளர்கள் சட்டப் பல்கலைக்கழகங்களில் இப்போது இல்லை என்பதை இந்நூல் கவலையோடு சுட்டிக்காட்டி உள்ளது. 


நீதித்துறையை சீர்திருத்துவதில் பாராளுமன்றத்துக்கு இருக்கும் பொறுப்பை இந்த நூல் எடுத்துக்காட்டுவது குறிப்பிடத் தக்கதாகும். உயர் நீதிமன்றங்கள் தாங்கள் கையாளும் வழக்குகள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவதற்கு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றினாலே போதும் பல்வேறு விதமான குறைபாடுகளைக் களைந்து விட முடியும் என்று இத நூலாசிரியர்கள் கூறுகின்றனர். அவ்வாறு புள்ளி விவரங்களை வெளியிடுவது நீதி வழங்கலில் ஒரு வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும். நீதி நிர்வாகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


மாவட்ட நீதித்துறையை சீர்திருத்துவதில் இருக்கும் முக்கியமான சவால் மாவட்ட நீதிபதிகளுக்கு தீர்ப்பு வழங்குவதில் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதாகும். அவ்வாறு செய்யும்போது நீதிபதிகள் புகார்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. நீதிபதிகளின் மீது புகார் வந்தால் அதை விசாரிப்பதற்கான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றம் ஒரு கமிஷனை நியமிக்க வேண்டும்” என இந்த நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். “மகராஷ்டிரா மாநிலத்தில் 2018-2022 க்கு இடையில் மாவட்ட நீதிபதிகள் குறித்து உயர் நீதிமன்றத்துக்கு 4138 புகார்கள் வந்தன; ஒரே வருடத்தில் 1200 புகார்கள் வந்தன” என்றும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவ்வளவு புகார்கள் வருவதென்பது இது கவனம் செலுத்த வேண்டிய சீரியஸான பிரச்சினையாக இருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவே, இதற்காகக் கமிஷன் ஒன்றை நிரந்தரமாக அமைப்பது மிகவும் அவசியம் என்று இந்த நூலாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


நீதித்துறையை சீர்திருத்துவதில் நாடாளுமன்றத்துக்கு இருக்கும் பொறுப்பை இந்த நூலின் இறுதியில் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “ அரசியல் வர்க்கமானது எப்போதும் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கும் 'ஒருமித்த கருத்துக்காக' காத்திருப்பதற்குப் பதிலாக, தாமே தலையிட்டு நீதித்துறையில் சீர்திருத்தத்தைக் கட்டாயப்படுத்த வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்படும் வரை, இந்த விஷயத்தில் நாடாளுமன்றம் தலையிட்டு சட்டம் இயற்ற அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த சீர்திருத்தங்களில் சிலவற்றைப் பற்றி நாடாளுமன்றம் உடனடியாக சிந்திக்கத் தொடங்குவது கட்டாயமாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ‘மக்களாகிய நாம் நமக்கு உறுதியளித்த நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரம்’ என்ற கருத்தாக்கம் இப்போது ஆபத்தில் உள்ளது.” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இந்த நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள கடமையை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளேன். ஃபாலி எஸ் நாரிமன் செய்தது போல தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யவும், வினாக்கள், கோரிக்கைக் கடிதங்கள் மூலம் சட்ட அமைச்சகத்தை வலியுறுத்தவும் உள்ளேன். 


இந்த நூலை வாசித்தத் தூண்டுதலில் மாவட்ட நீதிமன்றங்கள் குறித்த சில ஆய்வுக் கட்டுரைகளையும், இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகளையும் வாசித்தேன். நான் வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களின் செயல்பாடுகள், Bar Assn தேர்தல், அதன் அணிசேர்க்கை, அது சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்கிறது. ( Social organisation at the district courts colleague relationships among Indian lawyers- Charles Morrison, University of Rochester ) 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் வரலாற்றறிஞர் பர்டன் ஸ்டெயின் ஒருங்கிணைத்த ஒரு ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை அது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் நான் நடத்திவரும் தமிழ் போதி பத்திரிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியாகவுள்ளது. 


வெகுமக்களைப் பாதிக்கும் பிரச்சனை ஒன்றைப் பற்றி தனது முகநூல் பதிவின் மூலம் கவனத்தை ஈர்த்த திரு இரா. பார்த்திபன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.