“வறுமையை ஒழிக்கக் கல்வியே சிறந்த வழி” - ஐயா எல்.இளையபெருமாள்

Views : 35

பதிவு செய்த நாள் 15-Jul-2025

“ 1920களிலேயே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை கவனித்துக்கொள்வதற்காக லேபர் கமிஷனர் என்ற பதவி உருவாக்கப்பட்டு இருந்தது. அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்படிச் சேர்த்துக்கொள்ளாத பள்ளிகளுக்கு அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக அரசாங்கத்தை விடவும் அதிகமாக கிறித்தவ மிஷனரிமார்களே அளப்பறிய சேவைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் நடத்தி வந்த அமைப்புகளுள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றியம் (Depressed Classes Union), ஏழைகள் பள்ளிக் கழகம் (Poor School Society), சமூக சேவை இணையம் (Social Services League), ஆர்க்காடு மிஷன் (Arcot Mission)மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாடு (Depressed Classes Conference) ஆகியவற்றின் பணி குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியதாகும். ஆர்க்காடு மிஷன் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கென வேளாண் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தது.


தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக 1916ஆம் ஆண்டு முதற்கொண்டு எம்.சி.ராஜா, ராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன், சுவாமி சகஜாநந்தா ஆகியோர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தமக்கென்று அமைக்கப்பட்ட தனிப்பள்ளிகளில்தான் படிக்க முடிந்தது. அவர்களைத் தம்மோடு சாதி இந்துக்கள் சேர்த்துக்கொள்ளவில்லை. 1931ஆம் ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் அனைத்திலும் தீண்டப்படாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு ஆணையிட்டபோது சாதி இந்துக்கள் தமது பிள்ளைகளை அந்தப் பள்ளிகளுக்கு அனுப்ப மறுத்ததால் அவற்றை நடத்தி வந்த பலர் அந்தப் பள்ளிகளை மூடிவிட்டார்கள். இப்படிப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வி நிலை மிகமிக மோசமாகவே இருந்தது. 1931ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களில் 1.5 விழுக்காட்டினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் ஒரு விழுக்காட்டினர்தான் ஆரம்பக் கல்வியை தாண்டிப் படித்தவர்களாயிருந்தனர்.


***


தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வியை மேம்படுத்துவதற்குச் சிறப்பு நடவடிக்கைகள் அவசியம். தொடக்கத்தில் இதற்காக நாம் அதிகம் செலவு செய்யவேண்டி வரலாம். நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலும் போகலாம். ஆனால் அதற்காக நாம் மனம் தளர்ந்து விடவோ, அதிருப்தி அடையவோ கூடாது. பலநூறு ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக நாம் எடுக்கின்ற நடவடிக்கைகள் இவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்தியாவில் உள்ள ஆறரை கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக நாம் செலவிடுகிற தொகை மிகவும் குறைவுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வியில் செய்யப்படும் முதலீடே மற்ற எந்த முதலீட்டையும்விடச் சிறந்தது. ‘‘ஒரு நாடு மனித வள மேம்பாட்டுக்கென செய்கின்ற முதலீடுதான் உண்மையான முதலீடாகும். இரும்பு ஆலைகளை உருவாக்கவும், புனல் மின்நிலையங்களைக் கட்டியெழுப்பவும், இன்னும் பல்வேறு பணிகளுக்காகவும் நாம் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்கின்றோம். ஆனால் மிகச் சிறந்த மூலதனம், மிகச்சிறந்த கட்டுமானம் கல்வியில் செய்யப்படுவதுதான் என்பதை நாம் மறந்து விடுகிறோம். வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் நாம் தரமான கல்வியை வழங்கவேண்டும்” என்று முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் திரு. எம்.சி.சாக்ளா குறிப்பிட்டார். அது நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு வாசகமாகும்.


( எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கையிலிருந்து. தமிழாக்கம் : ரவிக்குமார் )