கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து: சிகிச்சை பெறுவோரை சந்தித்தேன்

Views : 11

பதிவு செய்த நாள் 08-Jul-2025

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவரும் ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவலறிந்து விசிக நிர்வாகிகளோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவரையும், ஓட்டுநரையும் பார்த்து ஆறுதல் கூறினேன். கேட் கீப்பரின் தவறினால் இந்த விபத்து நடந்துள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். 

இனி இதுபோன்ற விபத்து நடக்காதிருக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். 


1. தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் மட்டும் 490 லெவல் கிராஸிங்குகள் உள்ளன என்று ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார். அவற்றில் கேட் கீப்பர்கள் உள்ளனர். அவை அனைத்திலும் மேம்பாலமோ ( over bridge) அல்லது சுரங்கப் பாதையோ ( under pass ) அமைக்க வேண்டும். 


2. சுரங்கப் பாதை அமைக்க அந்த கேட் வழியே நாளொன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. மேம்பாலம் என்றால் நாளொன்றுக்கு 1 லட்சம் வாகனங்கள் போக வேண்டும். இந்த விதியின் படி வாகனப் போக்குவரத்து இல்லாததால் 490 லெவல் கிராஸிங்குகள் பெரும்பாலும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவிக்கின்றனர். எனவே, நாளொன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் செல்லும் லெவல் கிராஸிங்குகளில் சுரங்கப் பாதையோ , மேம்பாலமோ அமைத்துத் தர ரயில்வே துறை முன்வர வேண்டும். மேம்பாலம் அமைப்பதற்கான வாகன எண்ணிக்கையை 50 ஆயிரம் எனக் குறைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். 


3. தமிழ்நாட்டிலுள்ள லெவல் கிராஸிங்குகளில் கேட் கீப்பர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தற்போது விபத்து நடந்த கேட் கீப்பரும் வட இந்தியர்தான். மாநில மொழி தெரியாதவர்களை இதுபோன்றப் பணிகளில் அமர்த்துவதும்கூட விபத்து நடக்கக் காரணமாகிவிடுகிறது. எனவே ரயில்வே துறையில் அடிப்படையான பணிகளுக்கு அந்தந்த மாநிலத்தவரை மட்டுமே அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 


- ரவிக்குமார் எம்.பி