“ உயர் நீதிமன்றங்களில் தற்போது எஸ்.சி. நீதிபதிகள் 17 பேர்; எஸ்.டி. நீதிபதிகள் 9 பேர்; சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 15 பேர் மட்டுமே உள்ளனர்”

Views : 47

பதிவு செய்த நாள் 17-Mar-2023

“ உயர் நீதிமன்றங்களில் தற்போது எஸ்.சி. நீதிபதிகள் 17 பேர்; எஸ்.டி. நீதிபதிகள் 9 பேர்; சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 15 பேர் மட்டுமே உள்ளனர்”

ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

~

அ) எஸ் சி , எஸ் டி , ஓ பி சி பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை நீதித்துறையில் உறுதிப்படுத்துவதற்கு அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கை என்ன?

ஆ) நீதித்துறையில் உள்ளவர்களுக்கு இடையே சாதிய பாகுபாடு உணர்வு வந்துவிடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

இ) எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது?

ஈ) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

என்ற கேள்விகளை இன்று ரவிக்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அதற்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பின்வருமாறு எழுத்துபூர்வமாக பதில் கூறியுள்ளார்:

1. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 217 மற்றும் 224 இன் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. அதில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் நீதிபதிகள் நியமனங்களில் சமூக பன்மைத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. நீதிபதி நியமனங்கள் தொடர்பாக பரிந்துரைகள் அனுப்பப்படும் போது இதுபற்றி அரசு தலைமை நீதிபதிகளிடம் கேட்கிறது. எஸ்சி, எஸ்டி. ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்களுடைய பங்கேற்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. நீதிபதிகள் அளித்துள்ள தன்விவரக் குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது தற்போதுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளில் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 17 பேர் ; எஸ் டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 9 பேர் ; சிறுபான்மை மதத்தினர் 15 பேர் ; ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 64 பேர் உள்ளனர். 444 பேர் பொது பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உள்ளனர். எந்த சமூகம் என்று கண்டறிய முடியாத 20 நீதிபதிகள் உள்ளனர்.

2. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 309 இன் படி கீழமை நீதிமன்றங்களில் உயர் நீதிமன்றத்தை கலந்தாலோசித்து நீதிபதிகள் நியமனத்துக்கான விதிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள் நியமனம் மாநில அரசு சார்ந்தது என்பதால் அது குறித்த விவரங்கள் ஒன்றிய அரசிடம் இல்லை.

3) 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையின் (NCRB) அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எஸ்சி மக்கள் தொடர்பான வழக்குகளில் 36 % ; எஸ்டி மக்கள் தொடர்பான வழக்குகளில் 28.1% தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

4) சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வருவதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாநில அரசுகளின் பொறுப்பாகும். இது தொடர்பாக அவ்வப்போது ஒன்றிய அரசு மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்புகிறது.

6) சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் 1955 ; வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆகியவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி தேசிய அளவில் இதற்கான ஹெல்ப் லைன் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. "

இவ்வாறு சட்ட அமைச்சர் தனது பதிலில் கூறியிருக்கிறார்.