வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்

Views : 543

பதிவு செய்த நாள் 19-Jan-2023

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்

ஒன்றிய சட்ட அமைச்சர் திரு கிரென் ரிஜிஜு அவர்களிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் வலியுறுத்தல்

நீதித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் மாண்புமிகு கிரென் ரிஜிஜு அவர்கள் இன்று விழுப்புரம் வருகை தந்தார். அவரை வரவேற்ற விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். வெறுப்புப் பேச்சைத் தடை செய்வதற்கு சட்டம் இயற்ருமாறு அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரவிக்குமார் தனது கோரிக்கை மனுவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

வெறுப்புப் பேச்சு வழக்கை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. "இது ஒரு முழுமையான அச்சுறுத்தல் ,அதற்குக் குறைவானது இல்லை. வெறுப்புப் பேச்சின் தீவிரத்தன்மை குறித்து நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்... நாம் ஒரு ஃபிராங்கண்ஸ்டைனை (அரக்கனை) உருவாக்கி அது நம்மை விழுங்குவதற்கு விட்டுவிடக் கூடாது.” என அந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ( ஏஎஸ்ஜி) நடராஜ் அவர்கள், ’வெறுப்புக் குற்றங்கள் தொடர்பாக விரிவான சட்டமொன்றை இயற்றுவது தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது ‘ என நீதிமன்றத்தில் தெரிவித்தார். வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றுமாறு 07.01.2021 அன்றே நான் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்குக் கடிதம் கொடுத்துள்ளேன்.

தங்களின் கனிவான பரிசீலனைக்காகப் பின்வரும் அம்சங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்:

 1. ICCPR இல் கையெழுத்திட்ட நாடுகளில் நம் நாடும் ஒன்று. ICCPR இன் 20 ஆவது பிரிவின்படி, வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றுவது கட்டாயமாகும்.

 2. ’பிரவாசி பாலாய் சங்காதன்’ எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கின் தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் ""வெறுப்புப் பேச்சு என்பது ஒரு சமூகக் குழுவைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒருவவரை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகும். வெறுப்புப் பேச்சானது வெறுப்புக்கு இலக்காக்குவதன்மூலம் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையில் சிறுபான்மையாக உள்ள குழுவைச் சேர்ந்தவர்களை சட்டப்பூர்வமற்றவர்கள் ஆக்க முயற்சிக்கிறது. சமூகத்தில் அவர்களின் சமூக நிலை மற்றும் அவர்களுக்கான ஏற்பைக் குறைக்கிறது. எனவே, வெறுப்புப் பேச்சு என்பது , தனிப்பட்ட நபர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதையும் தாண்டி , பாகுபாடு, புறக்கணிப்பு, பிரிவினையை உண்டாக்குதல், நாடு கடத்தல், வன்முறை மற்றும் அதன் உச்சகட்டமாக இனப்ப்படுகொலைக்கு அடித்தளம் அமைக்கிறது ", என்று குறிப்பிட்டது. அத்துடன், இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஒரு மசோதாவை உருவாக்குமாறு இந்திய சட்ட ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார்.

 3. இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில், வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்ட ஆணையம் ஒரு மசோதாவை (குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2017) உருவாக்கி, மார்ச் 2017 இல் அதன் அறிக்கை எண்:267 உடன் ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

4.அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு, ) வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்ட ஆணையம் இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய பிரிவு 153C (வெறுப்பைத் தூண்டுவதைத் தடைசெய்தல்) மற்றும் பிரிவு 505A (சில சந்தர்ப்பங்களில் பயம், எச்சரிக்கை அல்லது வன்முறையைத் தூண்டுதல்) ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரைத்துள்ளது. .

 எனவே, குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து அதை உடனடியாக சட்டம் ஆக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என அந்த கடிதத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.