முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி அவர்கள் 13-12-2022 அன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான சப்ளிமெண்டரி கிராண்ட் மசோதா மீதான விவாத நேரத்தில் பேசியது:

Views : 532

பதிவு செய்த நாள் 14-Dec-2022

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே வணக்கம்!
இந்த (Supplementary Demand) சப்ளிமெண்டரி டிமாண்ட் மீது பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி என்பது மிகக் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. குறிப்பாக ரயில்வே தொடர்பான திட்டங்கள் பீகாருக்கு 6606 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆந்திராவுக்கு 7032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டு திட்டங்களுக்கு 3365 கோடி தான் ஒதுக்கப்பட்டது. அங்கே புதிய ரயில் திட்டம் எதுவும் கடந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் துவக்கப்படவில்லை. இந்த துணை நிதிநிலை அறிக்கையில் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று பார்த்தால் அதுவும் ஏமாற்றமாக தான் இருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. ஆனால், அந்த திட்டத்தின் கீழ் கடந்த பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையும் கூட முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் அதிகமாக கிராமப்புறங்களைக் கொண்டிருக்கிற என்னுடைய விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கிற நிலமற்ற விவசாயக் கூலிகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த சப்ளிமெண்டரி டிமாண்டிலே அதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

கல்விக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்குவோம் என்று தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜி.டி.பி'யில் 6 விழுக்காடு கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் நமக்குக் கல்விக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினருடைய உயர்கல்வி அதற்காக வழங்கப்படுகிற கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) இவையெல்லாம் வெகுவாக குறைக்கப்பட்டு பல திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதுபோலவே மௌலானா ஆசாத் பெயரிலே இருக்கின்ற சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு- ஆராய்ச்சி கல்வி படிக்கிற மாணவர்களுக்கு உதவுகிற அந்த திட்டம் இன்றைக்கு முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது எஸ்.சி/எஸ்.டி சமூகங்கள் மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுடைய படிப்பை அதிக அளவில் பாதிக்கிறது. அதற்கு இதிலே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தோம் குறைவாகவே இருக்கிறது. இந்த சப்ளிமெண்டரி டிமாண்டில் எஸ்.சி/எஸ்.டி பிரிவிற்கான தொகை கூடுதலாக ஒதுக்கப்படவில்லை.

அதுபோல, நம்முடைய பிரதமர் பெயரில் இருக்கிற வீடு வழங்கும் திட்டம் PMAY அதற்கான நிதியும் போதுமானதாக இல்லை. அதற்கான யூனிட் காஸ்ட் என்பது மிகமிக குறைவாக இருக்கிறது.
நாம் இன்றைக்கு பொதுப்பணித் துறையின் CPWD மூலமாக கட்டிடங்களை கட்டுவதற்கு நிர்ணியித்திருக்கிற தொகையும், வீடுகள் கட்டுவதற்கு நிர்ணயித்திருக்கிற தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிலே பத்தில் ஒரு பங்குகூட வீடு கட்டுவதற்கு நிர்ணிக்கப்பட்டு இருக்கிற தொகை இல்லை. இரண்டுக்கும் ஒரே விதமான பொருளைத் தான் - அதே சிமெண்ட் தான், அதே இரும்பைத் தான், அதே மணலைத் தான் பயன்படுத்த வேண்டும். ஆக அரசாங்கத்துடைய கட்டடத்தை கட்டுவதற்கு ஒரு நிதியும், மக்களுடைய வீடு கட்டுவதற்கு ஒரு நிதியும் ஒதுக்கும் போது இந்த திட்டமே இன்றைக்கு தோல்வியடையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, அதற்கான யூனிட் காஸ்ட்டை அதிகரித்து அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்நாட்டுக்கு பேரிடர் மேலாண்மையில் நிதி அதிகமாக வேண்டும்- இப்பொழுது கூட ஒரு புயல் வந்து அங்கே சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பேரிடர் மேலாண்மை நிதி என்பது போதுமான அளவில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்படுவதில்லை. அதை நாங்கள் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும் அந்த நிதி கூட்டி வழங்கப்படாமல் இருக்கிறது, அதையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்காக நம்முடைய நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு நன்றி சொல்லி அமர்கிறேன் வணக்கம்.