ஈழத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவி

Views : 1657

பதிவு செய்த நாள் 04-Jul-2022


விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் உள்ள 500 குடும்பங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2021 ஜூலை 4 அன்று நிவாரண உதவிகளை வழங்கினேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 கிலோ அரிசியும், 5 கிலோ காய் கறிகளும் வழங்கப்பட்டன. 

உலக அகதிகள் நாளான ஜூன் 20 (2021) அன்று கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை ஆய்வுசெய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன். அதனடிப்படையில், முகாமில் பதிவு நீக்கம் செய்யப்பட்டிருந்த 60 பேரில் 48 பேருக்கு மீண்டும் இப்போது பதிவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு காவல்துறை அறிக்கையோடு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, சாலை வசதிகள் தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டிருப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். 

“ஈழத்தமிழ் அகதி முகாம்களில் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்துவருபவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நானும் தலைவர் எழுச்சித் தமிழரும் எழுப்பினோம். இப்போது நடக்கவுள்ள கூட்டத்தொடரிலும் அதை எழுப்புவோம்” என முகாம்களில் உள்ள மக்களிடம் தெரிவித்தேன். 

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கணேஷ், மரக்காணம் வட்டாட்சியர் உஷா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிவாரண உதவிகளை கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் மலைச்சாமி ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சத்தியசீலன், பொன்னிவளவன் மயிலா வளவன், துரை வெங்கட், லட்சுமிபதி, மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- ரவிக்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர்