நிவர் புயல் வெள்ளம்: மத்திய குழுவிடம் ரவிக்குமார் அளித்த மனு

Views : 924

பதிவு செய்த நாள் 09-Dec-2020

நிவர் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்ய வருகை தந்த மத்திய குழுவிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார் அளித்த மனுவின் விவரம்:

1.மத்திய அரசு இதை தேசிய பேரிடராக அறிவித்து தமிழக அரசுக்கு இடைக்கால நிவாரணமாக 2,000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும்

2.புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேரடியாகப் பார்வையிட வேண்டும்

3.தமிழக அரசு ஏற்கனவே ரூ 3558. 55 கோடியை நிவாரணமாகக் கேட்டிருக்கிறது. அந்தத் தொகையை உடனடியாகத் தமிழக அரசுக்கு அளிக்கும் படி குழு பரிந்துரைக்க வேண்டும்.

4.பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து 2015ஆம் ஆண்டு இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை ( Lr No.32-7/2014-NDM-I நாள் 08.04.2015) சீராய்வு செய்து தற்போது உள்ள விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அந்தத் தொகையை உயர்த்தி வழங்கப் பரிந்துரைக்க வேண்டும்.

5.வெள்ளத்தால் சேதமடைந்த நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மற்ர பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

6.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்கள் நிவர் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் வாழ்வாதாரத்திற்காக பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

7.வாழை பயிரிட்ட விவசாயிகள் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கிறார்கள். எனவே அவ்வாறு சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

8.தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் என்பது பேரிடர் பாதிக்கும் மாவட்டங்களில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே அதிகமான குடிசை வீடுகள் உள்ள மாவட்டமும் விழுப்புரம் தான். எனவே மத்தியகுழு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடிசை வீடுகளையும், சிதலமடைந்து உள்ள தொகுப்பு வீடுகளுக்கும் மாற்றாக நிரந்தரமான கான்க்ரீட் வீடுகளைக் கட்டித் தருவதற்கு பரிந்துரைக்க வேண்டும்.

9.விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நிவர் புயல் மற்றும் வெள்ளத்துக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

10.தேசிய வனக் கொள்கை அடிப்படையில் நாட்டிலுள்ள நிலப்பகுதியில் 33.33% மரங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் அது 20.26% உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அது மிகவும் குறைவாக 11.86% மட்டுமே இருக்கிறது. நிவர் புயலின் காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்து விட்டதால் தற்போது இங்கே உள்ள வனப்பகுதியின் அளவு மேலும் குறைந்து விட்டது. எனவே இந்த மாவட்டத்தில் பெருமளவில் மரங்களை நட்டு வனப் பரப்பை அதிகப்படுத்துவதற்கு இந்த குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.