அஞ்சலி: ஆல்ஃப் ஹில்டெபீட்டல் (1942-2023) : கிராமப்புற சமயத்தை ஆராய்ந்த அறிஞர்

Views : 895

பதிவு செய்த நாள் 15-Mar-2023

தமிழ்நாட்டின் தென்னார்க்காடு வட ஆற்காடு பகுதிகளை ஆய்வுக் களமாகக்கொண்டு கிராமப்புற மக்களிடையே வழக்கத்தில் இருக்கும் சமய நடைமுறைகளுக்கும் இந்து சமய நடைமுறைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், வித்தியாசங்களையும் ஆராய்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை எழுதிய அறிஞர் ஆல்ஃப் ஹில்டெபீட்டல் மறைந்தார் என்ற தகவலை பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகர் நண்பர் நரேந்திரன் நேற்றிரவு அனுப்பியிருந்தார்.

பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டெபீட்டல் ஹேவர்ஃபோர்ட் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பில் சமயம் குறித்து படித்தார். அவர் சிகாகோ பல்கலைக்கழகத்திலுள்ள சமயங்கள் குறித்த துறையில் தனது கல்வியைத் தொடர்ந்தார், மதங்களின் வரலாற்றில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். அவரது ஆராய்ச்சியின் மையமாக இந்தியாவின் சிறந்த காவியங்கள் (குறிப்பாக மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் சமஸ்கிருத இதிகாசங்கள்), பிராந்திய நாட்டுப்புற காவியங்கள் மற்றும் திரௌபதி தெய்வத்தின் வழிபாட்டு முறை ஆகியவை இருந்தன. அவர் பல புத்தகங்களையும் , ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், தொகுத்துள்ளார்,மொழிபெயர்த்துள்ளார்

ஹில்டெபீட்டல், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் South India Term Abroad ( SITA ) என்னும் திட்டத்திற்கான இயக்குநராக இருந்துள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தின் ஹியூமன் சயன்சஸ் திட்டத்தின் இயக்குநராகவும் இருந்தவர்.

தமிழ்நாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் கூத்தாண்டவர் வழிபாட்டை பற்றி அவர் விரிவாக ஆராய்ந்து இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூவாகம் என்னுமிடத்தில் பெருமளவில் திருநங்கைகள் பங்கேற்கும் விழா நடைபெறுவதை நாம் அறிவோம் அந்த விழா குறித்தும் விரிவாக ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்.

ஆசிய பண்பாட்டில் மயிர் வகிக்கும் இடத்தைப் பற்றி அவர் தொகுத்த ஆய்வு நூல் மிகவும் சுவாரசியமானது. மயிர் நீக்கம் என்பது எப்படி துறவு, தண்டனை, பாலுணர்வு எனப் பல்வேறு விஷயங்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை அந்த நூலில் உள்ள கட்டுரைகள் விவரிக்கின்றன.

“இந்தியாவின் பாரம்பரிய காவியங்களும் அதன் பல நாட்டுப்புற காவியங்களும் ஒருவித தெய்வீகத்தன்மை கொண்ட கதாநாயகிகளுக்கு மைய இடங்களைத் தந்துள்ளன. “ என்று கூறிய ஹில்டேபீட்டல் , “ மகாபாரதத்தின் நாயகி திரௌபதி எப்படி ஆரம்பத்தில்

 பூமி தேவியைப் போல கறுப்பாக சித்திரிக்கப்பட்டு பின்னர் செழுமையின் தெய்வமாக திருமகளைப்போல உருவகப்படுத்தப்பட்டார் என்பதையும் திரௌபதி, தென்னிந்தியாவில் உள்ள சில சமூகங்களால் பெரிய தேவியின் வடிவமாக வணங்கப்படுகிறார் என்பதையும் ஆராய்ந்திருக்கிறார்.

பாரம்பரிய காவியத்துடன் ஒப்பிட்டு திரௌபதி வழிபாட்டு முறையைப் ஆராய்வதில் பல ஆண்டுகளை செலவிட்ட அவர், பெண் தெய்வங்களை சித்திரிப்பதில் பெண்கள் வகித்த பங்கையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் பண்பாட்டை ஆராய முனையும் எவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல்களை எழுதியுள்ள ஹில்டெபீடெல் மார்ச் 12, 2023 அன்று கொலம்பியாவின் cali என்னுமிடத்தில் காலமானார். அவருக்கு என் அஞ்சலி.