ஐஏஎஸ் அதிகாரத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் - ரவிக்குமார்

Views : 98

பதிவு செய்த நாள் 27-Feb-2023

ஐஏஎஸ் அதிகாரத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும்

 இன்றைக்கு மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருக்கிறது. இந்த ’டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்’ என்ற மாவட்ட ஆட்சியர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்களாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு சட்டம் 1858 ன் கீழ் தான் இந்த பதவி உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்தப் பதவி அதே அதிகாரத்தோடு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐசிஎஸ் என அழைக்கப்பட்ட அந்தப் பதவிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என ஜவஹர்லால் நேரு வலியுறுத்தினார். சுதந்திர இந்தியாவில் அந்தப் பதவிகள் இருக்காது என்றார். ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு ஐஏஎஸ்,ஐபிஎஸ் என அந்த அதிகாரத்துவக் கட்டமைப்பு இன்றும் தொடர்கிறது.

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக 1978ல் அசோக் மேத்தா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த ’டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்’ அதிகாரத்தைக் குறைக்க வேண்டும், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குகிற நிலையில் தலைமைச் செயலாளர் இருக்கிறாரோ அதுபோல மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் மட்டுமே கொண்டவராக மாவட்ட ஆட்சியர் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை அந்த கமிட்டி முன் வைத்தது. அசோக் மேத்தா கமிட்டி பரிந்துரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அந்தப் பரிந்துரையை வலியுறுத்த வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசுகள் சொல்வதைக் கேட்கக்கூடாது ஒன்றிய அரசு சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். பாஜக அரசின் நோக்கம் என்னவென்பது அதிலிருந்து நமக்குத் தெரிகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 72 , 73 ஆகியவை உருவாக்கப்பட்டு உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நேரத்திலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்களாக மாவட்ட ஆட்சியர்கள் இருப்பது அதிகார பகிர்வைத் தடுப்பதாக இருக்கிறது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்ட பிறகும் கூட அதற்கு எந்தவித அதிகாரமும் இல்லாத நிலை நிலவுகிறது.

எனவே பரந்துபட்ட அதிகாரம் பற்றிப் பேசுகிற இந்த நேரத்தில் நாம் மாவட்ட ஆட்சியருக்குள்ள அதிகாரங்களைப் பற்றி ஆராயவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதை இங்கே இருப்பவர்களின் பரிசீலனைக்கு முன்வைத்து, இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்பதைத் தெரிவித்து நிறைவுசெய்கிறேன், வணக்கம்.

( 26.02.2023 அன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி )