கார்ல் மார்க்ஸை ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு செய்வது ஏன்? - ரவிக்குமார்

Views : 116

பதிவு செய்த நாள் 27-Feb-2023

கார்ல் மார்க்ஸை ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு செய்வது ஏன்? 

“ தமிழ்நாட்டிலே ஆர் என் ரவி என்பவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்துகிற கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். ’தமிழ்நாடு தான் சனாதனக் கருத்துக்கு தோற்றுவாய், இந்தியாவுக்கே சனாதனக் கருத்தை வழங்கியது தமிழ்நாடு தான்’ என்று அவர் பேசுகிறார். ’பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருக்கிறது, சிலர் மட்டும் தான் கல்வி பெற முடியும். சிலர் மட்டும் தான் ஆட்சி அதிகாரத்துக்குத் தகுதியானவர்கள்’ என்று பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலே ஒரு ஏற்றத்தாழ்வான நிலையை உருவாக்கி வைத்திருந்தார்களே அதற்கான கருத்தியல்தான் சனாதனம். அந்த சனாதன கருத்துகளை தொடர்ந்து ஆதரித்துப் பேசுகிறவராக ஆர்.என். ரவி இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் என்றைக்கு நடைமுறைக்கு வந்ததோ அன்றைய தினமே ’இந்த நாட்டிலே ஏற்றத்தாழ்வு என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது. அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம். அனைவருக்கும் சமமான உரிமை’ என்று ஆக்கப்பட்டது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை வகிக்கிற ஒருவர், அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிற ஒருவர், அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கருத்துகளுக்கு எதிராக ஏற்றத்தாழ்வை உயர்த்தி பிடிக்கிற சனாதன கருத்துகளை ஆதரித்துப் பேசி வருகிறார். ஆர்.என்.ரவி அண்மையிலே ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். கார்ல் மார்க்சை இழிவு படுத்துகிற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இரண்டொரு நாட்களுக்கு முன்னாலே தோழர் முத்தரசன் அவர்கள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றை நான் பார்த்தேன். தமிழ்நாடு ஆளுநரைக் கடுமையாக எச்சரித்து அந்தப் பேட்டியிலே அவர் கருத்து தெரிவித்தார். தோழர் முத்தரசன் அவர்கள் அவ்வளவு கோபத்தோடு கடுமையாகப் பேசி நான் பார்த்ததில்லை. எதையும் அமைதியாக அணுகும் தோழர் முத்தரசன் அவர்களே கோபப்பட்டுப் பேசுகிறார் என்றால் அந்த அளவுக்கு கார்ல் மார்க்சை அவதூறு செய்யும் விதமாக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்தது தான் காரணம். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் மார்க்சியக் கோட்பாடு நிரந்தரப் பகைமைகளை உருவாக்கிவிடுகிறது என்றும், மார்க்சிய மாடல், சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் பாகுபாட்டை தோற்றுவிப்பதாகவும், சமூகத்தில் நிரந்தர மோதலை தூண்டிவிட்டதாகவும் ஆளுநர் கூறியிருக்கிறார். கார்ல் மார்க்ஸின் தத்துவம் செத்துபோய்விட்டது, அது தோன்றிய நாட்டிலேயே அதைக் கைவிட்டுவிட்டார்கள் எனப் பேசியிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் பற்றி ஆர். என். ரவி ஏன் திடீரென்று இப்படிப் பேச வேண்டும் என்று நாம் ஆராய வேண்டியுள்ளது.

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்திருந்தாலும், இந்தியாவுக்கு நேரடியாக வருகை தரவில்லை என்றாலும் இந்தியா பற்றி மிக அற்புதமான கணிப்புகளை முன் வைத்தவர். அவர் நியூயார்க் டெய்லி ரிப்யூன் என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து இந்தியாவைப் பற்றி 36 கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 1853 க்கும் 1858 க்கும் இடையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் பற்றி பல கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். இந்தியாவில் இருக்கிற விவசாய முறை, இந்தியாவில் பிரிட்டிஷ் காரர்களால் அறிமுகப்படுத்தப்படுகிற தொழில் புரட்சி , பருத்தி சாகுபடியார்களையெல்லாம் எப்படி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சுரண்டுகிறார்கள் என்பதைப் பற்றி இங்கிருந்த பிரிட்டிஷ் காலனி அரசாங்க நிர்வாகம் பற்றி துல்லியமான கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். இந்த கட்டுரைகளில் மட்டுமின்றி பிரடெரிக் எங்கல்ஸ் அவர்களோடும் மற்றவர்களோடும் நடந்த கடிதப் போக்குவரத்திலும் 32 கடிதங்களில் இந்தியாவின் நிலையைப் பற்றி அவர் விவாதித்திருக்கிறார். அருமையான ஆய்வுகளை அவர் இந்தியாவைப் பற்றி முன் வைத்திருக்கின்றார். இங்கே ஆர்.என்.ரவி உயர்த்திப் பிடிக்கிற சனாதனக் கோட்பாட்டின் காரணமாக, வர்ணாசிர கோட்பாட்டின் காரணமாக சாதிகளாகப் பிளவுபடுத்தப்பட்டுக் கிடந்த மக்களை உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைத்தது மார்கசின் தத்துவம். இந்தியாவைப் பிளவுபடுத்திய தத்துவம், கூறு படுத்திய தத்துவம் வர்ணாசிரம தத்துவம். மக்களை ஒன்று படுத்திய, இந்தியாவை ஒன்றிணைத்த தத்துவம் மார்க்சியம் என்கிற மகத்தான தத்துவம். 1857 சிப்பாய் கலகம் நடந்த போது கால் மார்க்ஸ் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில் இந்திய வரலாற்றை சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றார்.

இந்தியா,நீண்ட நெடுங்காலத்திலிருந்தே ஊடுருவல்காரர்களால் ஆளப்பட்டது. இந்துக்களின் மூன்று உயர் சாதிகளைக்கொண்ட - பூசாரிகள், வீரர்கள் மற்றும் விவசாயிகள் - வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒரு இனம், அதனுடன் ஒரு புதிய மொழி, புதிய மதம் மற்றும் புதிய சமூக நிறுவனங்களைக் கொண்டு வந்தது. லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் மற்றும் ஸ்லாவோனிக் மொழிகளோடு சமஸ்கிருதத்தின் வெளிப்படையான உறவு, இந்த ஊடுருவல்காரர்களின் இனம் , ஐரோப்பாவின் தற்போதைய ஆதிக்க இனங்களுடன் ஒரே வேரிலிருந்து தோன்றியதை நிரூபிக்கிறது. இந்த வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் தங்களை இளவரசர்கள், வீரர்கள், பூசாரிகள் மற்றும் நில உரிமையாளர்கள், நாட்டின் எஜமானர்கள் என ஆக்கிக்கொண்டபோது இந்தியாவின் பூர்வகுடி மக்கள் இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையை நோக்கி மேலும் மேலும் தள்ளப்பட்டார்கள். அவர்களெல்லாம் சூத்திரர்களாக, தாழ்ந்த சாதியினராக, கைவினைஞர்களாக, அரசியல் செல்வாக்கோ, அறிவுபூர்வமான செல்வாக்கோ அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.உயர் வகுப்பினரின் வேலையாட்களாக ஆக்கப்பட்டார்கள்’ என கார்ல் மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். சனாதனவாதிகள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை, இந்த நாட்டுக்குள் ஊடுருவியவர்கள் என்று கார்ல் மார்க்ஸ் அந்தக் கட்டுரையிலே தெரிவித்து இருக்கின்றார். சனாதனிகளின் மேலாதிக்கம் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் தகர்க்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய ஆட்சியை இங்கே உருவாக்கினார்கள். சனாதனத்துக்கு எதிரான கோட்பாட்டை அவர்கள் உயர்த்தி பிடித்தார்கள். உள் முரண்பாடுகளின் காரணமாக மொகலாயர் ஆட்சியும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. மீண்டும் சில இடங்களிலே பழைய சனாதன ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மொகலாயர்களை எதிர்த்துப் போரிட்டு வீழ்த்திய பெருமை பிராமணர்களுக்கோ, சத்திரியர்களுக்கோ கிடையாது. அவர்களின் ஆட்சிக்கு எதிராக மத்திய இந்தியாவில் பெரும் உள்நாட்டுப் புரட்சி மராட்டாக்களால் செய்யப்பட்டது. எவர் வேதத்தைப் படித்தால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பிராமணர்கள் வைத்திருந்தார்களோ அந்த மராட்டாக்கள் தான், சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மொகலாயர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றனர். பஞ்சாபில் சீக்கியர்கள் மொகலாயர்களை எதிர்த்துப் போராடினார்கள்’ என்று கார்ல் மார்க்ஸ் தனது கட்டுரையில் விவரித்து இருக்கிறார். பிராமணியம் என்பது, சனாதன தத்துவம் என்று சொல்லப்படுவது எப்படி பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருந்தது என்பதைத் துல்லியமாக முன்வைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆவார். ஆர்.என். ரவி கார்ல் மார்க்சியத்தை அவதூறு செய்வதற்குக் காரணம் அது சனாதனத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிற தத்துவமாக இருக்கிறது என்பதுதான்.” 

(26.02.2023 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் நடத்திய மாநாட்டில் ஆற்றிய உரையில் ஒரு பகுதி )