“ நகர உள்ளாட்சி அமைப்புகளின் பகுதி சபை உறுப்பினர் நியமனங்களில் பெண்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்” - ரவிக்குமார்

Views : 1036

பதிவு செய்த நாள் 01-Nov-2022

உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயகப்படுத்தக்கூடிய மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் பகுதி சபை கூட்டங்களை நடத்தச் செய்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டங்கள் இயற்றப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும் அவற்றை ஜனநாயகப் படுத்துவதற்கான நடவடிக்கை என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் மெது மெதுவாகத்தான் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 2006 - 2011 காலகட்டத்தில் உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராக இருந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அப்போது அந்த அமைப்புகளை ஜனநாயகப் படுத்துவதில் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு உறுதுணையாக திரு அசோக் வரதன் ஷெட்டி அவர்களும் இருந்தார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்ற இதற்காக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தற்போதைய முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட பணிகள் என்றும் மறக்க முடியாதவை. அவரே இப்பொழுது இந்த நகர அமைப்புகளை ஜனநாயகப் படுத்துவதற்கான நடவடிக்கையையும் எடுத்திருக்கிறார்.

அதிக அளவில் நகரமயமான ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. நமது மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகர அமைப்புகளில் வாழ்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயகப்படுத்தி மக்களுடைய பங்கேற்பை அதிகரிக்கச் செய்வது அவசியமான ஒரு பணியாகும். அதன் அடிப்படையிலேயே இப்பொழுது நகர அமைப்புகளில் பகுதி சபா க்கள் உருவாக்கப்பட்டு அந்தக் கூட்டங்கள் இன்று மாநிலமெங்கும் நடைபெறுகின்றன. முதன்முதலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற விதியை மாற்றி ஆறு கூட்டங்களாக அவற்றை நடத்துவதற்கு அறிவிப்பு செய்திருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா ஆகியவற்றின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிய விதிகளை தமிழ்நாடு அரசு அரசாணையாகப் பிறப்பித்திருக்கிறது. நகராட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு வார்டும் 4 பகுதி சபைகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி சபைக்கு நாலு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதி சபையிலிருந்தும் ஒருவரை வார்டு கமிட்டிக்கு முன்மொழிய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பகுதி சபை உறுப்பினருக்கான தகுதிகள் என்று பார்க்கும்போது வார்டு உறுப்பினர் ஆவதற்கு என்ன தகுதியோ அதுதான் இதற்கும் தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் இருக்கின்றன.ஒரு வார்டுக்கு 4 பகுதி சபைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பகுதி சபையிலும் 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த விதத்தில் விழுப்புரம் நகராட்சியில் மொத்தமாக 672 பகுதி சபை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 672 பேரில் பெண்களுக்கோ, பட்டியல் இனத்தவருக்கோ இட ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

நகர அமைப்புகளில் எப்படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த அமைப்புகளை ஜனநாயக படுத்துவதற்கென்று உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பகுதி சபை உறுப்பினர் நியமனங்களிலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதுபோலவே பட்டியல் இனத்தவருக்கும் அவர்களுக்கு உரிய விழுக்காட்டில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தமுடியும்.

உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரப் படுத்துவதிலும் ஜனநாயகப் படுத்துவதிலும் பேரார்வம் கொண்டு இந்த நல்ல முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பகுதி சபை கமிட்டிகள் மற்றும் வார்டு கமிட்டிகளில் பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் விதமாக தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி, வணக்கம் !