கல்வெட்டு வளத்தைப் பயன்படுத்துவோம்! - ரவிக்குமார்

Views : 593

பதிவு செய்த நாள் 01-Nov-2022


தமிழ் மொழியின் வளங்களைப் பற்றி நாம் பெருமைப்படப் பேசுகிறோம். தமிழ் மொழியில் உள்ள வளங்களில் முக்கியமானது கல்வெட்டியில் வளமாகும். இந்தியாவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் சுமார் 60 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டவையாக உள்ளன. தமிழின் தொன்மையை நிறுவுவதில் இந்த கல்வெட்டுகள் பேருதவி புரிகின்றன என்பது மட்டுமின்றி பழந்தமிழ்ச் சமூகத்தை, அந்த சமூகத்தில் நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகளை, பண்பாட்டு நடவடிக்கைகளை, இந்தக் கல்வெட்டுகளின் மூலமாக நாம் துலக்கமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் மொழியின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டும் என்பதைத் தமிழறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர். தமிழ் மொழியை பேச்சு வழக்கு இலக்கிய வழக்கு என இரண்டாகப் பிரிப்பார்கள் இலக்கிய வழக்கு என்பது பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டது. இலக்கியத்துக்குள் பேச்சு வழக்கைப் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு விதியாக பேணப்பட்டு வந்திருக்கிறது. தமிழில் நவீன உரைநடை இலக்கியம் தோன்றியதற்குப் பிறகு பேச்சு வழக்கு இலக்கியத்துக்குள் இடம்பெறலாயிற்று . எனவே மொழி அடிப்படையில் பார்த்தால் இலக்கியப் பிரதிகள் மக்களிடமிருந்து சற்று தள்ளியே நின்றன.

அதனால் நமக்குக் கிடைக்கும் இலக்கியப் பிரதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழியினுடைய வரலாற்றை முழுமையாக எழுதி விட முடியாது. இலக்கியப் பிரதிகள் முன்பு ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன . சுவடிகளின் ஆயுள் காரணமாக அவ்வப்போது அந்தப் பிரதிகளைப் புதிய சுவடிகளில் பெயர்த்து எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு எழுதும்போது பாடபேதங்களும், இடைச்செருகல்களும் மலிந்தன. பிரதி எடுக்காமல் விடுபட்டுப் போன இலக்கியங்கள் எத்தனையோ இருந்திருக்கும். அவை காலத்தில் அழிந்து போய்விட்டன. நம்முடைய சங்க இலக்கியப் பிரதிகள் கூட பல்வேறு பிரதிகளை ஒப்பிட்டு இறுதி செய்யப்பட்டவை தான். இந்த இலக்கியப் பிரதிகள் எழுதப்பட்ட இலக்கிய வழக்கு என்பது வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றாலும் அந்த வளர்ச்சி வேகமாக நடந்துவிடவில்லை .மெது மெதுவாகத்தான் இலக்கிய வழக்கில் மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால் பேச்சு மொழி அவ்வாறு இல்லை, அது பல கூறுகளையும் உள்வாங்கி வேகமாக மாறி வந்திருக்கிறது. கல்வெட்டுகள் பேச்சு வழக்கைப் பின்பற்றி பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் இலக்கிய வழக்கு எப்படி இருந்தது என்பதை இலக்கியப் பிரதிகள் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம். ஆனால் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்கு கல்வெட்டுகளே துணை புரிகின்றன. கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் பேச்சு வழக்கைச் சார்ந்ததாக உள்ளது. தமிழ் மொழியின் வரலாற்றை எழுதும்போது இலக்கியப் பிரதிகள் எந்த அளவுக்கு அடிப்படையாக அமைகின்றனவோ, அதே போல பேச்சு வழக்கைப் பதிவு செய்திருக்கும் கல்வெட்டுகளும் அடிப்படையாக உள்ளன. எனவே கல்வெட்டுகளை நாம் மிகவும் முக்கியத்துவத்தோடு அணுக வேண்டும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகள் பெரும்பாலானவை படி எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல கல்வெட்டுகள் கண்டறியப்படுகின்றன. இங்கே இருக்கும் திரு வீரராகவன் அவர்களும் பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர் என்பது நமக்குத் தெரியும். படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவும் பதிப்பிக்கப்படவில்லை. ஏ எஸ் ஐ சார்பில் சவுத் இண்டியன் இன்ஸ்கிரிப்ஷன்ஸ் வால்யூம்களில் அவற்றைப் பதிப்பித்து வெளியிடுகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த வரிசையில் 36 ஆவது வால்யூம் வெளியானது. அதில் சுமார் 300 தமிழ் கல்வெட்டுகள் வெளியாகி உள்ளன. அவை 1910 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பட்டவை. அவையே இப்போதுதான் வெளியாகின்றன.

அருண் ராஜ் பேசும்போது மெக்கன்ஸியின் பெயரைக் குறிப்பிட்டார். மெக்கன்ஸி சேகரித்த பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு மிக முக்கியமானவை. அவர் வாய்மொழி வரலாறுகளையும், சித்திரங்கள் நாணயங்கள் என பல வரலாற்றுக்கான தரவுகளையும் சேகரித்தார். 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான வரலாற்றை எழுதுவதற்கு அவையெல்லாம் பயன்படக்கூடியவை. அந்த ஆவணங்களைக்கூட முழுமையாக நாம் இன்னும் பதிப்பிக்கவில்லை. பொருட் செலவு ஆகும் என்பதல்ல அதற்குக் காரணம் , நம்மிடையே வரலாற்று உணர்வு இல்லை என்பதுதான் இந்த அலட்சியத்துக்குக் காரணம்.

இதுவரை பதிக்கப்பட்டிருக்கிற கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு மேல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவற்றை மொழியியல் நோக்கில், சமூகவியல் நோக்கில், மானிடவியல் நோக்கில், பண்பாட்டு நோ க்கில், வரலாற்று நோக்கில் நாம் ஆராய வேண்டும். அவ்வாறு செய்யும்போது தான் இந்த கல்வெட்டுகளின் உண்மையான பயன் தெரியவரும்.

இந்தியாவில் தொல்லியல் துறை ஆங்கிலேயர்களால் எப்போது உருவாக்கப்பட்டது என்பதை இங்கே பேசிய திரு அருண்ராஜ் அவர்கள் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இருக்கும் கல்வெட்டுகளைப் படித்து அவற்றில் இருக்கும் செய்திகளை முதலில் நமக்குச் சொன்னவர்கள் அயல் நாட்டவர்கள் தான். அவர்கள் அதைச் செய்யாது போய் இருந்தால் நம்முடைய வரலாறே நமக்குத் தெரியாமல் போய் இருக்கும்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு சோழர்களைப் பற்றியும் , தஞ்சை பெரிய கோவில் குறித்தும் இப்பொழுது பரபரப்பாக பேசுகிறோம். திரைப்படத் துறையிலிருந்து திடீர் திடீரென வரலாற்று அறிஞர்கள் முளைக்கிறார்கள். ஆனால் தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜ சோழன் தான் கட்டினான் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு நீண்ட காலம் தெரியாமலேயே இருந்தது. அதை ‘கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலன் கட்டினான், அவனுக்கு குஷ்டரோகம் பிடித்திருந்தது, அது அங்குள்ள சிவகங்கையில் குளித்ததால் குணமானது’ என்று பிரகதீஸ்வரர் மகாத்மியம், தஞ்சைபுரி மகாத்மியம் என்ற புராண நூல்களில் சொல்லப்பட்ட கதைகளைத்தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். இன்னொரு புறம் அந்தக் கோயிலை மனிதர்கள் கட்டவில்லை பூதங்கள் தான் கட்டின என்றும் சொல்லப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் அந்தக் கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளைப் படித்து இது ராஜ ராஜ சோழன் கட்டியது என்று தெரிவித்தார். பின்னாளில் தமிழர்கள் இப்படி மூடத்தனத்துக்கு ஆட்பட்டு விடுவார்கள் என்று தெரிந்துதானோ என்னவோ ராஜராஜன் ‘நான் தான் அந்தக் கோயிலைக் கட்டினேன்’ என்பதை அங்கேயே கல்வெட்டாகப் பொறித்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறான். இன்று சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நாம் பேசுகிறோம். அதற்கு அடித்தளமாக அந்த நாகரீகத்தின் தடயங்களைக் கண்டுபிடித்துச் சொன்னவர்களும் அயல் நாட்டவர்கள் தான்.

தமிழ்க் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை எழுதுவது என்பது என்ற பழக்கம் நம்மிடையே குறைவாகவே இருக்கிறது. இந்த கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று நூல்களை எழுதியவர்களில் பெரும்பாலோர் அயல் நாட்டவர்களாகவோ அல்லது அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவோத்தான் இருக்கிறார்கள். சோழர்கால வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியையும், சதாசிவ பண்டாரத்தாரையும் விட்டால் நமக்கு வேறு நம்பகமான தமிழ் நூல்கள் இல்லை. ஆனால் அதைப் பற்றி நல்ல பல நூல்களை எழுதியவர்கள் அயல் நாட்டவர்கள் தான். பர்ட்டன் ஸ்டைன் போல அரசு உருவாக்கம் குறித்து ஆராய்ந்த தமிழ் வரலாற்றாசிரியர்கள் தமிழில் எவரும் இல்லை. இப்போதும் கூட தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வுகளுக்கு ராஜன் குருக்கள், சஞ்சய் சுப்ரமணியம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைத் தான் நாம் தேடிப் போக வேண்டி உள்ளது.

நமது கல்வெட்டுகளுடைய வளத்தை  இளைய தலைமுறையினரிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால் முதலில் நாம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு கல்வெட்டைப் பின்பற்றி சென்றாலே மிகப்பெரிய ஆய்வு ஒன்றை நாம் நடத்த வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு அவற்றில் செய்திகள் உள்ளன. மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைந்திருக்கும் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் இப்பொழுது சவுத் இந்தியன் இன்ஸ்கிரிப்ஷன்ஸ் வால்யூம் 36 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கல்வெட்டு மாணிக்கம் என்ற பெண் தனக்கு சொந்தமான நிலத்தை விற்றதைப் பற்றிக் கூறுகிறது. அந்தப் பெண்ணை அடிமை கொண்டிருந்தவன் அவளுக்கு அபராதம் விதிக்கிறான். அந்த அபராதத் தொகையை அவளால் கட்ட முடியவில்லை . உன் நிலத்தை விற்று அதைக் கட்டு என்று சொல்கிறான். நிலத்தை விலை கூறினால் வாங்குவார் இல்லை , ஊர் சபை யாரிடம் இந்த நிலத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றவள்  கேட்கிறாள், அவர்களும் ஊர் சபையில் பணம் இல்லை என்று கூறி விடுகிறார்கள். பின்னர் திருவிடந்தை வராக பெருமாள்  கோயிலின் சார்பிலே அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என நாட்டாரும், ஊராரும் கூறியதால் 200 பணத்துக்கு அந்த மூன்று வேலி நிலம் வாங்கப்படுகிறது. இதை அந்த கல்வெட்டு கூறுகிறது. அந்த கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, அப்போது பெண் நிலம் வைத்துக்கொள்ள உரிமை பெற்றிருந்தாள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமின்றி சில கேள்விகளும் நமக்கு எழுகின்றன. ‘ இவளை உடையார் வீரபாண்டிய காலிங்கராயர் தெண்டம் நிச்சயித்த ‘ தொகை என்று கல்வெட்டில் வருகிறது. மூன்று வேலி நிலம் உரிமையாக வைத்திருந்த ஒரு பெண் ஏன் ஒருவனிடம் அடிமையாக இருந்தாள்? அவள் என்ன தவறு செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது? அபராதம் விதிப்பதற்கு ஒரு நபருக்கு யார் அதிகாரம் அளித்தது? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டறிந்தால் ஒரு மிகப்பெரிய ஆய்வேடு தயாராகிவிடும்.

நுண்ணுணர்வு இல்லாத ஒரு சமூகம் பெருமிதம் பேசுவதால் பயன் இருக்க முடியாது. அத்தகைய சமூகம் பேசுகிற பெருமிதம் எல்லாம் வெற்றுப் பெருமிதமாகவே இருக்கும். நாம் வெற்றிப் பெருமிதம் பேசுகிற சமூகமாக இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். இதை மாற்றுகிற பொறுப்பு நம் எல்லோருக்குமே இருக்கிறது.

ராஜராஜ சோழனின் சதய விழா இப்பொழுது அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. அதே திருவிடந்தை கோவிலில் இன்னொரு கல்வெட்டு இருக்கிறது, அது கிபி 1002 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு. மாமல்லபுரத்தில் இருக்கும் மீனவர் குடும்பங்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்பது கழஞ்சு பொன்னைக் கொடையாக அளித்து ராஜராஜ சோழனின் பிறந்தநாளைத் திருவிழாவாகக் கொண்டாடச் செய்திருக்கிறார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்தபோதே அதைச் செய்திருக்கிறார்கள். அது தொடர்பான செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. அந்த மீனவர்களின் பெயர்கள் அதில் இருக்கின்றன. அந்த அளவுக்கு அவர்கள் ஆளுமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போதும் கூட மீனவர்கள் பொதுச் சமூகத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இல்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு இருந்திருக்கிறார்கள் என்பதை அந்த கல்வெட்டு உணர்த்துகிறது. தஞ்சாவூரில் சதயத் திருவிழா நடத்தும் நம்முடைய அரசு அந்த மீனவர்கள் முன்னெடுத்த சதயத் திருவிழாவை மாமல்லபுரத்தில் திருவிடந்தையில் நடத்த வேண்டும் இதை நான் ஒரு கோரிக்கையாக தமிழ்நாடு அரசிடம் முன்வைக்க உள்ளேன்.

இந்தக் கல்வெட்டுப் பயிற்சி கல்வெட்டுகள் எப்படி எல்லாம் மாறி வந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதோடு முடிந்து விடக்கூடாது. இங்கே வந்திருக்கிற நீங்கள் இதிலிருந்து உணர்வுத் தூண்டல் பெற்று மேலும் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். இந்த கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்யும்போது இந்த தமிழ்ச் சமூகத்தினுடைய வரலாறு மேலும் துலக்கப்படும். நன்றி வணக்கம்!

( விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த கல்வெட்டுப் பயிற்சி முகாமின் துவக்கவிழாவில் 29.10.2022 அன்று ஆற்றிய வாழ்த்துரையின் சுருக்கம் )