"தமிழ்நாடு அரசு தலித் கிறித்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும்” - ரவிக்குமார்

Views : 1112

பதிவு செய்த நாள் 19-Sep-2022


தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் தலைவர் டாக்டர் மேரி ஜான் அவர்களே! இங்கே கூடியிருக்கிற சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த மாநாட்டின் தீர்மானங்களாக நீங்கள் முன்மொழிந்திருப்பவற்றை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன், வழிமொழிகிறேன். முதல் தீர்மானமாக தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்பட்டால் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எஸ் சி மக்களின் பங்கு 25 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்துவிடும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எஸ்சி மக்கள் 20 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிற மாநிலங்கள் ஒரு சில தான். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், அரியானா, தமிழ்நாடு என்று சில மாநிலங்களை மட்டும் தான் அப்படி குறிப்பிட முடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் எஸ் சி மக்கள் 20 விழுக்காடு இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் தலித் கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையை சேர்த்தால் அது 25 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்து விடும். இந்த எண்ணிக்கை பலம் என்பது எஸ்சி மக்களுக்கு மிக மிக அவசியம். இந்த மக்களுக்குப் பொருளாதார பலம் கிடையாது, சமூக பலம் கிடையாது. இவர்களுக்கு இருப்பது எண்ணிக்கை பலம் ஒன்றுதான் என்பதை உணர்ந்த காரணத்தினால் தான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நேரத்தில் எஸ்சி மக்களின் எண்ணிக்கை பலத்துக்கு ஒரு மதிப்பை புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்படுத்தினார். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்று ஆக்கியதன் மூலம் எஸ் சி மக்களுடைய எண்ணிக்கை பலத்துக்கு அரசியல் மதிப்பு உருவானது. சனாதனவாதிகள் இந்த மதிப்பை, பாராளுமன்ற ஜனநாயக முறையில் அதன் வலிமையைப் புரிந்து கொண்டு எஸ் சி மக்களுடைய எண்ணிக்கை பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற முடிந்தது என்றால் அதற்கு சனாதனைகளின் இந்த சதிதான் காரணம். அங்கிருக்கும் எஸ் சி மக்களில் எண்ணிக்கை பலம் குறைவாக இருக்கும் சிறிய சாதிகளை அணுகி அவர்களை அங்கே எண்ணிக்கை பலமுள்ள எஸ்சி சாதியாக இருக்கும் சமார் சாதிக்கு எதிராக அவர்கள் திருப்பி விட்டனர். அதே தந்திரத்தைத் தான் தமிழ்நாட்டிலும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள். இங்கே எந்தெந்த சாதிகளை எப்படி எப்படி மயக்கி தம் பிடிக்குள் கொண்டு போயிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவர்களுடைய நோக்கம் எஸ்சி மக்களுடைய எண்ணிக்கை பலத்தை அழிக்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் சனாதனம் இங்கே கோலோச்ச முடியும். எஸ் சி மக்கள் அதிகாரம் பெற்றால் அவர்களால் இங்கே வாலாட்ட முடியாது. எஸ் சி மக்களின் எண்ணிக்கை பலம் அத்தியாவசியமானது என்பதுதான் புரட்சியாளர் அம்பேத்கருடைய சிந்தனை. தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்வதன் மூலம் அம்பேத்கர் விரும்பிய எண்ணிக்கை பலம் இந்த சமூகத்திற்கு கிடைக்கிறது. எனவே இந்த கோரிக்கை புரட்சியாளர் அம்பேத்கருடைய நோக்கத்துக்கு உடன்பாடானதாக இருக்கிறது.

இரண்டாவதாக நீங்கள் முன் வைத்திருக்கிற கோரிக்கை தலித் கிறித்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படும் வரை தற்போது இருக்கும் ஓபிசி பட்டியலில் அவர்களுக்கு 4.6 % உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் கிறித்தவ சமூகத்தினர் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது கிறித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டாம் அதை தலித் கிறித்தவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்குங்கள் என்று நான் சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். சட்டப்பேரவை ஆவணங்களில் அது பதிவாகி இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் நான் முன்வைத்த கோரிக்கையை நீங்கள் யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது அதே கோரிக்கையை நீங்கள் முன்மொழிந்திருக்கிறீர்கள். இது எனக்கு மகிழ்ச்சியை ஆறுதலைத் தருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சரியான கோரிக்கையைத்தான் நான் முன் வைத்தேன் என்ற மனநிறைவைத் தருகிறது. எந்தவொரு விஷயத்திலும் நீண்டகால இலக்கு, உடனடி இலக்கு என இரண்டு அணுகுமுறை இருக்க வேண்டும். சாதி ஒழிப்பு என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் நீண்டகால இலக்கு. தீண்டாமை ஒழிப்பு என்பது உடனடி இலக்கு. அரசியலமைப்புச் ச்ட்டத்தை உருவாக்கியபோது தீண்டாமை ஒழிப்பு என்ற உடனடி இலக்கை அம்பேத்கர் நிறைவேற்றினார். அதுபோல எஸ்சி பட்டியலில் சேர்வது என்பது நீண்டகால இலக்கு, பிசி பட்டியலுக்குள் 4.6% உள் ஒதுக்கீடு என்பது எட்டக்கூடிய உடனடி இலக்கு. இது நிச்சயம் வெல்லக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால் இதை தமிழ்நாடு அரசே செய்துவிட முடியும்.

மூன்றாவதாக நீங்கள் இங்கே நிறைவேற்றி இருக்கிற தீர்மானம் கிறித்தவ மத நிறுவனங்களில் தலித் கிறித்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதாகும். அதுவும் நீதி க்கான ஒரு கோரிக்கைதான். நிச்சயம் இது அனைவராலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு கோரிக்கை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்துவாகப் பிறந்து விட்டேன் இந்துவாக இறக்க மாட்டேன் என்று தனது 44 வது வயதில் சபதம் ஏற்றார். அதன் பிறகு எந்த மதத்தை ஏற்பது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். முதலில் சீக்கிய மதம் அவருக்கு சிறந்த ஒன்றாகத் தெரிந்தது. ஏனென்றால் எஸ் சி மக்கள் எவ்வளவு ஒடுக்கினாலும் எதிர்க்காமல் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அதற்குக் காரணம் ஆயுதம் ஏந்தும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதுதான். சீக்கிய மதம் அந்த உரிமையைத் தருகிறது. சீக்கிய மதத்தில் சேர்ந்தால் நிச்சயம் இவர்கள் தங்களது துணிச்சலை, வீரத்தை மீட்டெடுப்பார்கள் என்று அம்பேத்கர் நம்பினார். அதற்காக பஞ்சாப்புக்குச் சென்று மாஸ்டர் தாராசிங் என்பவரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். 1936 ஆம் ஆண்டு அவரோடு அமிர்தசரஸ் நகருக்குப் போனவர்கள் தங்களை சீக்கிய மதத்தில் இணைத்துக் கொண்டார்கள். சீக்கிய மதத்தில் சேர்வது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் முடிவை சீக்கிய மதத்தில் இருந்த உயர் சாதிக்காரர்கள் விரும்பவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற எஸ்சி மக்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று சீக்கிய மதத்தில் சேர்ந்தால் சீக்கிய மதம் அவர்களுடைய மதமாக மாறிவிடும். நாமெல்லாம் சிறுபான்மையினர் ஆகி விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அம்பேத்கரின் முயற்சியை அவர்கள் வரவேற்கவில்லை, ஊக்குவிக்கவில்லை. சீக்கிய மதத்திலும் சாதி பாகுபாடு இருக்கிறது என்பதை அறிந்த அம்பேத்கர் அந்த மதத்தில் சேர்வதில் அதன் பின்னர் ஆர்வம் காட்டவில்லை.

சீக்கிய மதம் வேண்டாம் என முடிவெடுத்த பிறகு அம்பேத்கர் கிறித்தவ மதத்தைப் பரிசீலித்தார். அவர் மதித்துப் போற்றிய இரண்டு பெரும் ஆளுமைகள் பகவான் புத்தரும் இயேசு கிறிஸ்துவும்தான். அத்தகைய மதிப்பு இயேசு கிறிஸ்துவின் மேல் அம்பேத்கருக்கு இருந்தது. தமிழ்நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் டி நோபிலி பாதிரியாரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை மிஷன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவருக்குத் தெரிய வந்தன. நிறைய பேர்களைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்னால் முதலில் உயர்சாதியினரை சேர்க்க வேண்டும் அவர்களைப் போல நாமும் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ராபர்ட் டி நோபிலி காவி உடை தரித்து, பல்லக்குலே பவனி வந்து கிறித்துவ மதத்தின் மிஷனரி நோக்கத்தையே மாற்றி அமைத்தார். அது தொடர்பாக ஏசு சபையினருக்கும் பாண்டிச்சேரியில் இருந்த கப்பூச்சியன் சபையினருக்கும் வழக்குகள் கூட நடந்தன. போப்பாண்டவர் வரை அது போனது. இந்த சர்ச்சைகளையெல்லாம் படித்து அறிந்த அம்பேத்கர் கிறித்தவ மதமும் சாதியால் கறை பட்டு விட்டது , அதில் சேருவதால் எஸ்சி மக்களுக்கு ஈடேற்றம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். அன்றைக்கு அவர் எந்த காரணத்தால் கிறித்தவத்தைப் புறக்கணித்தாரோ அதே காரணத்தைத்தான் இன்றைக்கு நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் கிறித்தவம் பற்றிய மதிப்பீடு சரிதான் என்பதை உங்கள் கூற்று உணர்த்துகிறது. கிறித்தவத்தைத் தழுவிய தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வேதனை அளிக்கிறது.

அண்மையில் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் அதில் பங்கேற்றனர். அந்த மாதா கோயிலின் திருவிழாக்கள் இந்துமதப் பண்டிகைகளைப் பின்பற்றி நடத்தப்படுகின்றன. மாதா கோயிலிலே 11 நாட்கள் மண்டகப்படி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் செட்டியார், தேவர், நாடார் என ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மண்டகப்படி உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மாதா கோயிலின் நடைமுறைகளிலே இருக்கும் சாதிய பாகுபாடு பற்றிய செய்திகளை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள். இது ஒரு உதாரணம்தான். இதுபோல கிறித்தவ கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் படிப்பதற்கான வாய்ப்புகளில் தலித் கிறித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் சிறுபான்மை மதத்தினரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படுகிறது. அண்மையில் கர்நாடக மாநிலத்திலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது சீக்கியர்களுக்கு எதிராகவோ, பௌத்தர்களுக்கு எதிராகவோ ஏன் முஸ்லிம்களுக்கு எதிராகவோகூட அல்ல. அது முழுக்க முழுக்க கிறித்தவர்களுக்கு எதிராகத்தான் கொண்டு வரப்படுகிறது. இதை கிறித்தவ சமயத் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சூழ்ந்து வரும் சனாதன பேராபத்தை அவர்கள் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் கிறித்தவ மதத்தில் ஜனநாயகத்தைப் பேணுவதன் மூலமாகத்தான் அதை வலிமையானதாக வைத்திருக்க முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கிறித்தவ மதத்திலே பெரும்பான்மையாக இருக்கும் தலித் கிறித்தவ மக்களைப் புறக்கணித்துவிட்டு, அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதன சக்திகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். கிறித்தவ சமயத்துக்குள் சாதிய பாகுபாடு பின்பற்றப்படுகிறது என்று சொன்னால் அது மறைமுகமாக அல்ல நேரடியாகவே சனாதன சக்திகளுக்குத் துணை போகிற துரோகச் செயலாகும். அத்தகைய துரோகத்தை இழைக்கலாமா என்பதை கிறித்தவ சமயத் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இங்கே தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ள உங்களுடைய கோரிக்கைகளுக்காக தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும், நானும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். அது போலவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்துக் குரல் எழுப்புவார்கள். நீதிக்கான இந்த கோரிக்கைகள் நிச்சயம் வெல்லும். உங்களோடு நாங்கள் துணை நிற்போம் என்று உறுதிகூறி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!

( 18.09.2022 அன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தலித் கிறித்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாட்டில் முனைவர் ரவிக்குமார் ஆற்றிய உரை)