தமிழ்நாடு அரசு சமவாய்ப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் - ரவிக்குமார்

Views : 1115

பதிவு செய்த நாள் 01-Nov-2021

இஸ்லாம் என்கிற மிகப்பெரிய சமயத்தை தோற்றுவித்தவர் நபிகள் நாயகம் அவர்கள். அவர்களின் பிறந்த நாளை மத நல்லிணக்க நாளாகக் கடைபிடித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடுகிற முஸ்லிம் லீக் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் போது தமிழ்நாடு எப்போதும் சமய சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக, எல்லா சமயத்தினரும் சகோதரர்களாகச் சேர்ந்து வாழும் மாநிலமாக இருக்கிறது என்று நாம் பெருமைப்படப் பேசிக்கொள்வது வழக்கம். நபிகள் பெருமகனார் பிறந்து இஸ்லாம் என்கின்ற சமயத்தை உருவாக்கிய காலத்தில் தமிழ்நாட்டின் வரலாறு எப்படி இருந்தது என்று நாம் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அப்போது தான் பக்தி இயக்கம் என்ற பெயரில் மன்னர்களையெல்லாம் சைவ மதத்துக்கு மாற்றுகிற பணி இங்கே தீவிரமாக நாயன்மார்களால் முன்னெடுக்கப்பட்டது. அப்படி சைவத்தைத் தழுவிய மன்னர்கள் தமது நாடுகளில் வாழ்ந்த பௌத்த சமணர்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்றொழித்தனர். இங்கே மதத்தின் அடிப்படையிலான வன்முறையின் காரணமாக ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் காலமாக அது இருந்தது. அரசர்களின் ஆதரவோடு பௌத்த சமணர்களை உயிரோடு கழுவிலேற்றிப் படுகொலை செய்தார்கள். அந்தக் காட்சிகளை கோவில்களில் சிற்பங்களாக வடித்து வைத்திருக்கிறார்கள். அந்த சிற்பங்களைப் பார்த்தால் உயிரோடு பௌத்த சமணர்கள் கழுமரத்தில் செருகப்பட்டு அவர்களுடைய கபாலங்களைப் பிளந்து கழுவின் கூர்முனை வெளித்தெரியும் காட்சியை நாம் பார்க்க முடிகிறது. அப்படி கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைக் காக்கைகள் கழுகுகள் கொத்துகிற, நாய்கள் நரிகள் அந்த சடலங்களைக் கடித்துக் குதறுகிற காட்சியை சிற்பங்களில் சித்திரித்து வைத்திருக்கிறார்கள். பார்ப்போர் பயந்து நடுங்கும் விதமாகக் கொடூரமான முறையில் அந்த சிற்பக் காட்சிகள் உள்ளன. பொதுமக்கள் அதைப் பார்க்கவேண்டும் பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றினால் அவர்களுடைய கதி என்னவாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும், அதன் மூலம் அந்த மதங்களைக் கைவிட வேண்டும் என்ற நோக்கோடு தான் அந்தக் காட்சிகளைக் கோயில்களில் வடித்து வைத்திருக்கிறார்கள். ஒருவரைப் படுகொலை செய்வதிலேயே மிகக் குரூரமான முறை கழுவேற்றுதல் என்கிற முறைதான். அதைக் கடைபிடித்த நாடு தமிழ்நாடுதான். மிக மோசமான மத வன்முறை தலைவிரித்தாடிய நாடாக இது இருந்திருக்கிறது என்பதைத்தான் வரலாறு நமக்குக் கூறுகிறது.

பக்தி இயக்கக் காலத்தில் தமிழ் நாட்டின் சிந்தனைக்குள் செலுத்தப்பட்ட இந்த வன்முறை எனும் நஞ்சு முற்றாக அகன்றுவிட்டது என நாம் கூறமுடியாது. பக்தி இயக்க காலத் தமிழ்நாட்டின் வரலாறு நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. அரசு ஆதரவோடுதான் மத ரீதியான வன்முறையை நிகழ்த்த முடியும் என்பதுதான் அது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மதவெறி சக்திகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தமிழ் நாட்டை மத வன்முறையின் களமாக மாற்றுவதற்கு தீயசக்திகள் கிராமம் தோறும் ஊடுருவி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இப்போது மகளிர் குழுக்களை அமைக்கிறோம், மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறோம் என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளை நிறுவித் தங்களுடைய சதி வேலையை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் திட்டமிட்டு ஊடுருவியிருக்கிறார்கள்.


கடந்த அதிமுக ஆட்சியின்போது செய்யப்பட்ட நியமனங்களில் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட பலர் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இப்போது தெரியவருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பில் உறுப்பினராக சேரும்படி பேராசிரியர்களிடத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. அப்படி உறுப்பினர்களானால் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வரமுடியும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதை நம்பி பல பேர் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் இப்போது தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசு இதையெல்லாம் கவனத்தோடு பரிசீலித்து உயர்கல்வி வளாகங்களில் இத்தகைய நாசகார சக்திகள் ஊடுருவாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும்போது அவர்களது பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதே முதன்மையான விஷயமாக மாறிவிட்டது. அதனால் மற்ற விஷயங்களில் நாம் போதிய கவனம் செலுத்த முடியாதவர்கள் ஆகி வருகிறோம். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை நான் எழுப்பினேன். நமக்கெல்லாம் மறந்திருக்காது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு தீர்ப்பு எழுதுகிற நீதிபதி தனது பெயரை வெளியிடாமல் எழுதிய தீர்ப்பு அந்தத் தீர்ப்பு தான். அந்த அளவுக்குத் தனது பெயரைச் சொல்ல கூச்சம் அடையும் அளவுக்கு அந்தத் தீர்ப்பு எழுதப்பட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்கான டிரஸ்ட்டிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில் பாபர் மசூதியைக் கட்டுவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு ட்ரஸ்ட் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டு ட்ரஸ்ட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான ட்ரஸ்டுக்கு நிதி வழங்கினால், நன்கொடை அளித்தால் அவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மசூதி கட்டுவதற்கான ட்ரஸ்டுக்கு அதுபோல் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. அதற்கு ஏன் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை? என்று நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். இன்னும் ஆறு மாதங்களுக்குள் அதை பரிசீலித்து முடிவு செய்வோம் என்று எனக்கு அமைச்சர் பதில் அளித்தார். விழுப்புரத்திலிருந்து உங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்மட்டுமே அங்கு இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நான் ஒரு வினாவை எழுப்பினேன். சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அது அளித்த பரிந்துரைகளில் முக்கியமானது சமவாய்ப்பு ஆணையம் உருவாக்குவது பற்றியது. அனைத்து சமயத்தினரும் வேலைவாய்ப்புகளில், படிப்பில் மற்ற நடவடிக்கைகளில் சமமான வாய்ப்பு பெறுவதை அரசாங்கம் உத்தரவாதம் செய்யவேண்டும். அதற்காக தனியே ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதை செயல்படுத்துவதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சச்சார் குழு பரிந்துரைத்தது. ஆனால் அதை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை இங்கிலாந்து நாட்டில் 1976 ஆம் ஆண்டு இயற்றப்பட்டுள்ள சட்டத்தை போல இந்தியாவில் அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான சம வாய்ப்பு ஆணையம் எப்போது அமைக்கப்படும்? என்று நான் கேள்வி எழுப்பினேன்.அத்துடன் இந்தியாவில் இருக்கிற பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உரிய விகிதத்தில் இடம் அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு பன்மைத்துவத்தை நடைமுறைப்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானியக்குழு நிதி ஒதுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலளித்த ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்காக செயல்படுத்துகிற திட்டங்கள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு விவரித்தார். நான் எழுப்பிய இரண்டு கேள்விக்கும் அவர் பதில் எதையும் அளிக்கவில்லை. ஒன்றிய பாஜக அரசு அதைச் செய்யாது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் திமுக அரசு சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவோம் என்று உறுதி கூறி இருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவார். நாம் தமிழ்நாடு அரசிடம் இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும். முஸ்லிம் லீக் கட்சியின் மீது நமது முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அன்பு கொண்டவர். எனவே நீங்கள் கேட்டால் அதை மறுக்க மாட்டார். தமிழ்நாட்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் சமவாய்ப்பு ஆணையத்தை உருவாக்குங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றும்படி 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன். இப்போது நாம் கோரிக்கை விடுத்தால் இஸ்லாமியர்கள்மீது பரிவும் பாசமும் கொண்ட திமுக அரசு நிச்சயம் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு உங்களைக் கேட்டுக்கொண்டு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றிகூறி அமைகிறேன், வணக்கம்.

( 30.10.2021 அன்று விழுப்புரம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஆற்றிய உரை )